வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது வவுனியாவில் தாக்குதல்!

வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவம் வியாழனன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உக்குளாங்குளத்தில் தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்ட வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவியின் மரண வீட்டுக்குச் சென்றுவிட்டு சக மாகாண சபை உறுப்பினராகிய எம்.பி.நடராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்த போது, அவர்களைப் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாதவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணம் செய்த இந்திரராஜா மீது கிரிக்கட் மட்டை போன்ற இரும்பினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

தாக்குதலையடுத்து, பின்னால் வந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் தியாகராஜா ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாகிய மாகாண சபை உறுப்பினர் இந்திரராஜாவை வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Related Posts