வடமாகாண சபை உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்பு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்புத் தொடர்பாக வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

CVK-Sivaganam

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேற்படி விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பொலிஸ்மா அதிபருக்கு நாம் எழுதிய கடிதங்களின் நிழற்பிரதியினையும் இத்துடன் முன்னிலைப்படுத்துகின்றேன். வடமாகாண சபையின் 38 உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

மேற்குறித்த கடிதத்தின் அடிப்படையில் உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு வழங்குதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. உறுப்பினர்களான அனந்தி சசிதரன், பாலச்சந்திரன் கஜதீபன், மற்றும் சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோரின் வேண்டுகோள்களிற்கிணங்க பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற வடமாகாண சபை அமர்வின் போது, மேற்படி உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு திடீரென மீளப் பெற்றப்பட்டுள்ளன என முறையிட்டுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதய வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தனக்கு வழங்கப்பட்டிருந்த (எம்.எஸ்.டி) பாதுகாப்புச் சேவையும் மீளப் பெற்றப்பட்டுள்ளதாக முறையீடு செய்துள்ளார்.

இம்முறைப்பாடுகளைக் கருத்திற் கொண்டு அதிமேன்மைதங்கிய தங்களுக்கு இவ்விடயத்தினை முன்னிலைப்படுத்துவதுடன், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளாருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் இதனைச் சமர்ப்பித்து குறிப்பிட்ட உறுப்பினர்கள் நால்வருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வசதிகளை மீளப் பெற்றுக்கொடுக்கக் கோருவதெனவும், ஏனைய உறுப்பினர்களினால் கோரிக்கைகள் விடுக்கப்படும் பட்சத்தில் அவர்கள் எல்லோருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கக் கோருவதெனவும் வடமாகாண சபை தீர்மானித்துள்ளதாக அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts