1,000 லீற்றர் குடிநீர் பெறுவதற்கு 7.95 ரூபாய் செலவாகும் இரணைமடுக் குடிநீர்த் திட்டத்தை கைவிட்டுவிட்டு, அதேயளவு குடிநீர் பெற 140 ரூபாய் செலவாகும் மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்துக்கு வடமாகாண சபை ஆதரவு தெரிவித்து, அத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது என வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டினார்.
மருதங்கேணி குடிநீர்த் திட்டம் நடைமுறைப்படுத்துவது சாத்தியமாகுமா? என அவரிடம் வினாவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடங்கியிருக்க வேண்டும். அதற்கு பதிலாக மாற்றுத்திட்டங்கள் கொண்டு வருகின்றோம் எனக்கூறி இன்று வரை எந்தத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தற்போது, மருதங்கேணியிலிருந்து கடல்நீரைப் பெற்று நன்னீராக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளனர். அந்தத்திட்டத்தில் 1,000 லீற்றர் தண்ணீரைப் பெற 140 ரூபாய் செலவாகும். ஆனால், இரணைமடுவிலிருந்து பெறுவதற்கு 7.95 ரூபாய் மாத்திரம் செலவாகும்.
மருதங்கேணி நன்னீர்த்திட்டத்தில் பயன்படுத்தப்படும், தண்ணீர் சுத்திகரிப்பு பொறியை 7 வருடங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அதற்கு பாரிய மூலதனச் செலவு ஏற்படும்” என்றார்.