இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கியுள்ள உறுதிமொழிகளை உடனடியாக நிறைவேற்ற, வலியுறுத்தி வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நாவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்றயதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘சகல கட்சிகளும் இணைந்து தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு முன்வரவேண்டும். குறித்த தீர்மானத்தினை நானும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இங்கிருந்து சென்ற குழுவுடன் இணைந்து ஐ.நா.வில் சமர்ப்பித்துள்ளோம்.
எம்மால் சமர்பிக்கப்பட்ட தீர்மானத்தின் எதிரோலி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் உரையில் பிரதிபலிக்கும். வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது வடக்கில் வாழும் பதினொரு இலட்சம் மக்களினதும் சார்பாக ஐ.நா சபையில் எம்மால் சமர்ப்பிக்கப்பட்டது’ என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.