வடமாகாண சபையின் 9ஆவது அமர்வில் 14 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது

north-provincial-vadakku-npcவடமாகாண சபையின் 9ஆவது அமர்வில் 15 பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ள நிலையில் 14 பிரேரணைகள் இதுவரை சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதுஅதன்படி 2013 ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை முடித்த மாணவர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவைத்தலைவரால் பிரேரணை முன்வைக்கப்பட்டது. இதனை உறுப்பினர் சுகிர்தன் வழிமொழிந்தார்.

பசுபதிப்பிள்ளையினால் கொண்டுவரப்பட்ட மாற்றுவலுவுடையோர் நலனை வடக்கு மாகாண சபை கவனத்தில் எடுத்துக் கொள்ளல் மற்றும் கிளிநொச்சி தேசிய பாடசாலையில் நடைபெறும் நிகழ்வுகளால் கற்றல் செயற்பாடுகள் மேற்கொள்ள முடியாது உள்ளது. இதனால் அவற்றை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டு ஏகமனதாக சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

உறுப்பினர் ரவிகரனால் கொண்டு வரப்பட்ட கருங்கல் அகழ்வு உள்ளிட்ட பாலம் மற்றும் வீதிகள் அமைத்தல் என மூன்று பிரேரணைகள் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதன்போது மேற்கூறப்பட்ட பிரேரணைகள் தொடர்பில் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு விடயங்களை தொடர்பில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடமராட்சி கிழக்கு பகுதியில் தனி நபர்களாலும் தனியார் துறைகளாலும் சட்டபூர்வமற்ற கனியவள அமைச்சின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் மண் அகழ்வினை தடுத்து நிறுத்தி யாழ்.மாவட்டத்திற்கு தேவையான மண்ணை மத்திய அரசின் அனுமதியுடன் வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட பிரதேச செசயலகங்களுக்கு ஊடாக அல்லது பிரதேச சபைகளின் ஊடாக வழங்குவதற்கு சுற்றுச் சூழல் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணையினை உறுப்பினர் சுகிர்தன் முன்வைத்தார்.

இந்த மண் அகழ்வில் மகேஸ்வரி நிதியம் தொடர்பிலும் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியும் சபையில் விவாதங்களில் ஈடுபட்டனர். மேலும் மண் கொள்ளையில் தொடங்கி ஆள் கொலை கொள்ளையடிப்பு என விவாதம் சபையில் நீண்டு சென்றது.

இதன்போது வளங்கள் இராணுவத்தினராலும் , பல்வேறு தரப்பினராலும் சுறண்டப்பட்டு வருகின்றது. எனவே இவற்றை தடுத்து நிறுத்த எல்லைப்படையினை நிறுவ வேண்டும் என சிவாஜிலிங்கம் சபையில் முன்வைத்தார். அத்துடன் ஜனநாயக கட்சி தொடர்பில் பல விவாதங்கள் இரு தரப்பிலும் இடம்பெற்றன.

தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள பொதுமக்களுடைய காணிகளை அவர்களுக்கே மீளவும் கையளித்து அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு அரசும் , பாதுகாப்பு அமைச்சும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற பிரேரணையினை உறுப்பினர் அஸ்வின் சபையில் முன்வைத்தார்.

இது தொடர்பில் உரையாற்றுகையில் கடற்படையினரின் தேவைக்கு என பிரதேச செயலகத்திற்கு தெரியாது குறித்த காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நிர்கதியாகியுள்ளனர்.

பொதுபல சேனா போன்றவர்கள் குறித்த இடத்திற்கு அனுப்பி அவர்களை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர். எனவே இங்கு மோசமான அரசியல் காணப்படுகின்றது என்றார்.

குறித்த பிரேரணையினை அமைச்சர் டெனீஸ்வரனால் வழிமொழிந்து உரையாற்றுகையில், வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டத்திலும் காணி சுவீகரிப்பு காணப்படுகின்றது எனவே இவற்றை நிறுத்த சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் மன்னாரில் நடைபெறும் மணல் அகழ்வு மற்றும் வெளியில் மணல் கொண்டு செல்வதை நிறுத்த இந்தச் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணையினையும் சபையில் முன்வைத்தார். இதனை உறுப்பினர் சிராய்வா வழிமொழிந்தார். சபையில் குறித்த பிரேரணைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

இரணைமடு திட்டம் தொடர்பில் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் திரிவு படுத்தி உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை தொடர்பில் திருத்தி செய்தி வெளியிட சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தவராசா 11ஆவது பிரேரணையாக சபையில் கொண்டுவந்தார்.

அதனை எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் வழிமொழிந்தார். எனினும் அளும் கட்சியினர் இந்த பிரேரணை தொடர்பில் பல விவாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. இதில் வாக்கெடுப்பு வேண்டும் என சிவாஜிலிங்கம் சபையில் தெரிவித்தார். அதேவேளை இது பிரேரணையாக எடுக்க வேண்டிய தேவையல்ல என சயந்தன் சபையில் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் உரையாற்றிய அஸ்வினும் குறித்த விடயம் பிரேரணை அல்ல என தெரிவித்தார். எனினும் அவைத்தலைவர் குறித்த விடயம் தொடர்பில் தெளிவு படுத்தி குறித்த பிரேரணையினை நிராகரித்தார்.

தொடர்ந்து வடக்கு கிழக்கில் உள்ள வைத்தியர் பற்றாக்குறையை தமிழ்பேசும் வைத்தியர்களை இந்தியா அனுப்பி வைப்பதுடன் தகவல் தொழில் நுட்ப ஆசிரியர்களையும் அனுப்பி வைக்க வேண்டும் என இந்திய அரசும் இலங்கை அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறுப்பினர் சிவாஜிலிங்கம் பிரேணையினை சபையில் முன்வைத்தார்.

எனினும் குறித்த பிரேரணையினை விந்தன் கனகரத்தினம் வழிமொழிந்தார். இருப்பினும் இந்தியாவின் செயற்பாடு குறித்து இரு தரப்பும் விவாதங்களில் ஈடுபட்டு ஆயுதங்களை வழங்கிய இந்தியா ஆசிரியர்களைக் கொடுக்கும் என்று குறித்த பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இறுதிப்பிரேரணையாக உறுப்பினர் பரஞ்சோதியினால் அச்சுவேலியில் உள்ள விவசாய காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி உள்ளனர் எனவே அவற்றை விடுவித்து விவசாய நடவடிக்கைக்கு வழிசெய்ய வேண்டும் என பிரேரித்தார். அதனை உறுப்பினர் சயந்தன் வழிமொழிந்தார்.

இதேவேளை, மேலதிக பிரேணையாக போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்கள் ஒழுங்கான முறையில் நடாத்தப்பட்டு தேவையான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

மேலும் வவுனியா , முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இன்னமும் அபிவிருத்திக்குழு கூட்டம் இடம்பெறவில்லை எனவே அதனை நடாத்துவதற்கு நடவடிக்கை வேண்டும் என்று பிரேரித்தார். இதனை எதிர்க்கட்சி உறுப்பினர் றிவ்கான் வழிமொழிந்தார்.

அடுத்து மன்னார் மாவட்டத்தில் முசலிப்பிரதேச மக்கள் மீண்டும் மீள்குடியேற்றம் செய்யப்படுவதுடன் விவசாய நிலங்களை விடுவிக்க வேண்டும் என்ற பிரேரணை அமைச்சர் டெனீஸ்வரனால் முன்மொழியப்பட்டது. அதனை சிராய்வா வழிமொழிந்தார் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Related Posts