மிகவும் குறைந்த அதிகாரங்களோடும், குறைந்த வளங்களோடும், அரசியல் குழிபறிப்புகளுடனும் இயங்கிக்கொண்டிருக்கும் எமது வடமாகாணசபையின் மூலம் எமது தாயக மக்களுக்கு உச்சக்கட்ட சேவையை ஆற்றுவது தான் எமது அடிப்படையான நோக்கமாகும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.
தீவகத்திற்கான குடிநீர் வழங்கலின்; முதற்கட்டமாக இன்று திங்கட்கிழமை தம்பாட்டி பிரதேசத்துக்கு வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நீர் வழங்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மேலும் அங்கு தெரிவித்தாவது,
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரான எம்மை மிகப்பெரிய அளவில் மக்கள் நம்பியிருக்கிறார்கள். அந்த மக்களின் நம்பிக்கைக்குப்பாத்திரமாக நடக்க வேண்டியது எங்களுடைய மிக முக்கியமான கடமை.
அதிலும் குறிப்பாக விசேடமாக தீவகத்தின் ஊர்காவற்றுறைத்தொகுதி மக்கள் பல்வேறு நெருக்குவாரங்களையும் தாண்டி எங்கள் மீது வைத்திருக்கும் அந்த நம்பிக்கையை நாம் எப்பாடுபட்டும் காப்பாற்றுவோம் என்பதற்கான ஒரு அடையாளமாகத்தான் நான் இந்த நிகழ்ச்சியைக் கருதுகின்றேன்.
மக்கள் தமது பிரச்சனையை எம்மிடம் முறையிடுகிறார்கள். நாம் அப்பிரச்சனைகளை எம் சக்திக்குட்பட்ட முறையில் சாதகமாக அணுகி அப்பிரச்சனைகளைத்தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்திருக்கின்றோம்.
தொடர்ந்தும் இவ்வாறான பணிகளை மேற்கொள்வோம். பல்வேறு இடர்கள், பல்வேறு நெருக்குவாரங்கள், பல்வேறு மிரட்டல்களின் மத்தியிலும் கூட பலவிதங்களிலும் பாதிக்கப்பட்ட எம்மக்கள் தமிழ்த்தேசிய சிந்தனையுடன் இப்பிரதேசத்தில் வாழ்கிறார்கள்.
ஏனைய பிரதேசங்களை விடவும் இப்பிரதேசத்தில் இவ்வாறான தமிழ்த்தேசியப்பற்றுடன் வாழ்வதன் கஷ்டங்களை மிக அறிந்தவன் என்ற ரீதியில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இது பிற பிரதேசங்களுக்கும் ஒரு முன்னுதாரணமான செயற்பாடாகவே நான் இதைக்கருதுகின்றேன் எனவும் தெரிவித்தார்.
குடிநீர் வழங்கும் நிகழ்வில் வடமாகாணசபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், விந்தன், இ.ஆர்னோல்ட் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபைச்செயலாளர் சுதர்சன், ஊர் மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்தி
ஊர்காவற்துறை தம்பாட்டி கிராமத்துக்கான குடிநீர் விநியோகம் வடக்கு விவசாய அமைச்சால் ஆரம்பம்