வடமாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினை, கிரிக்கெட் போட்டி போன்று இருந்தது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.
வடமாகாண விவசாயம் மற்றும் கல்வி அமைச்சுகளை முதலமைச்சர் பொறுப்பேற்றுக்கொண்டதுடன் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெற்ற நிகழ்வுகள், ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (21) மாலை இடம்பெற்றன.
இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்துரைக்கையில், “30 வருடகால போரின் பின்னர் ஏற்பட்ட முதலாவது வடமாகாண சபையில், இவ்வாறான குழப்ப நிலைகள் ஏற்பட்டதுடன் அவை சுமூகமாக நிறைவடைந்துள்ளமை மகிழ்சியைத் தருகின்றது. அரசியல் நாடகத்தில் ஒருபாகம் தற்போது நிறைவடைந்துள்ளது.
“பல விவாதங்கள் கலந்துரையாடல்களுக்கு பிறகு இப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. வடமாகாண சபையின் காலம் முடிவடைந்து வரும் நிலையில் இனிவரும் காலங்களில் ஒன்றிணைந்து செய்படவேண்டும்” என, தெரிவித்தார்.