வடமாகாண சபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள்!

ilankai-tamil-arasu-kadsiநடைபெற இருக்கும் வட மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் கீழ் வரும் சிபார்சுகளை முக்கியத்துவம் கொடுத்துச் சேர்க்குமாறு கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சிக் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இக்கோரிக்கை, கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை.சேனாதிராசா, முதலமைச்சர் வேட்பாளர் சீ.வீ.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பின்வரும் விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

  • சர்வதேச இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் தொடர்பான முழுமையான விசாரணையைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றனர். வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுகின்றமைக்கும் சர்வதேச விசாரணையை நோக்கிய நகர்விற்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லை என்பது தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடு.
  • பிரிக்கப்பட முடியாத வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகம்: பிரிந்த வடக்கு மாகாணத்தில் போட்டியிடுவதன் மூலம் பிரிந்த வடக்குக் கிழக்கைத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் எனப் பொருள் கொள்ளலாகாது.
  • – தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் தீர்வைத் தமிழர்கள் வலியுறுத்துகின்றனர். இவற்றை அங்கீகரித்து வரும் தீர்வே (அது சமஷ்டித் தீர்வாக இருந்தால் கூட) நிலையான தீர்வாக இருக்கும்.
  • 13ஆவது திருத்தம் அரசியல் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியல்ல. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது 13ஆவது திருத்தத்தைத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் அல்லது தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என அர்த்தப்படுத்தப்படக் கூடாது.
  • ஆயுதமேந்திய அரசியல் போராட்டம் எமது போராட்ட வரலாற்றின் முக்கியவொரு காலகட்டம். அது எமது போராட்டத்தின் இயல்பான இயங்கியல் வள்ர்ச்சியின் முக்கிய கட்டம். அது தொடர்பிலான நினைவுகளைப் பேணுவதற்கு தமிழர்களுக்கு முழுமையான உரிமையுள்ளது.
  • பொதுவான குறிப்பு: வட மாகாண சபையைக் கைப்பற்றுவதன் மூலம் வடக்கில் புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்ற தோரைணயில் தேர்தல் விஞ்ஞாபனம் அமையப் பெறக் கூடாது. மாகாண சபை முறைமையில் உள்ள அடிப்படைப் பலவீனங்கள் மக்கள் பணியாற்ற தடையாகவிருக்கும் என்பதனைத் தெளிவுபடுத்த வேண்டும்.

Related Posts