வடமாகாண சபைத் தேர்தலை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

northவடமாகாண சபைத் தேர்தலை ரத்து செய்ய இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சிங்கள ஜாதிக பெரமுன அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த பிறகு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.

இலங்கை ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய வடமாகாண சபைக்கு தேர்தல் நடக்கவுள்ளதால், நாட்டின் அரசியல் சாசன சட்டத்தின்படி, இந்த மனுவை விசாரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்று அரச தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் சிங்கள ஜாதிக பெரமுன ஒரு அரசியல் கட்சி என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தேர்தல்கள் ஆணையாளர் அந்தக் கட்சியை இதுவரை அங்கீகரிக்கவில்லை என்று வழக்கு விசாரணையின் போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா சுட்டிக்காட்டினார்.

ஆகவே இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் நீதிபதி கூறிவிட்டார்.

அதன் பிறகு மனுவை நிராகரிக்க நீதிபதி முடிவெடுத்தாக சிங்கள ஜாதிக பெரமுனவின் தேசிய அமைப்பாளர் விஜித ரோஹன விஜயமுனி தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பயங்கரவாதம் காரணமாக இலங்கையின் வட பகுதியிலிருந்து சுமார் இருபதாயிரம் சிங்கள மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், அவர்கள் இன்னும் மீள்குடியமர்த்தப்படாத நிலையில்,தேர்தல் நடைபெற்றால் மீள்குடியேற்றப்படாத மக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர் கூறுகிறார்.

இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கம் இந்தத் தேர்தலை நடத்தத் தீர்மானித்துள்ளது என்றும், சிங்கள மக்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளார் என்றும் விஜித ரோஹன விஜயமுனி தெரிவித்தார்.

இந்த வழக்கை தாக்கல் செய்த சிங்கள ஜாதிக பெரமுனவின் தேசிய அமைப்பாளர் விஜித ரோஹன விஜயமுனியே இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கொழும்பு சென்றிந்த வேளையில், இராணுவ மரியாதையை பார்வையிட்டபோது துப்பாக்கியால் தாக்க முயற்சித்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Related Posts