13ஆம் திருத்தத்திற்குள்ளும் மாகாணசபை முறைக்குள்ளும் முடக்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், வடமாகாண சபைத் தேர்தலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்றய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘அரசும் அதனுடைய சர்வதேச ஆதரவு சக்திகளும் தமிழ் அரசியலின் தேசியவாத சிந்தனையை இல்லாது ஒழித்து 13ஆம் திருத்தத்திற்குள்ளும் மாகாணசபை முறைக்குள்ளும் முடக்கும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பதான அறிவிப்பை விடுக்கின்றோம்.
1987 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ற பெயரில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு எம்மீது திணிக்கப்பட்ட நாளில் இருந்து அதனை தமிழ் மக்கள் நிராகரித்து வந்துள்ளார்கள்.
எமது சம்மதமின்றி எம்மீது திணிக்கப்பட்ட ஓர் அரசியல் தீர்வை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதுமில்லை, அதனைத் தொட்டுப்பார்க்கத் தாயராகவும் இல்லை. மாகாண சபை முறைக்கு அங்கீகாரம் வழங்குவதனை எத்தகைய காரணங்களினாலும் நியாயப்படுத்திவிட முடியாது என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. இது எமது தேசிய உரிமைப் போராட்டத்தின் ஆன்மாவை உலுக்கும் செயலாகவே நாம் பார்க்கின்றோம்.
அறிவிக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தலின் புறச்சுழலை அவதனிக்கும்போது உரிமைக்கான எமது போரட்டம் பதவிக்கான போரட்டமாக மாற்றப்பட்டு விட்டதென்ற வேதனையான உண்மை எம்மை கலங்க வைக்கிறது. மேலதிகமாக தமிழ்த் தேசிய அபிலாசைகளை பிரதிபலிக்கின்றோம் என்று கூறிக்கொண்டிருக்கும் தரப்புக்கள் இந்த மாகாண சபை முறைக்கு அங்கீகாரம் கொடுப்பதன் ஊடாக ஒரு இன அழிப்பில் இருந்து தமிழ்த் தேசத்தை காப்பாற்ற வேண்டும் என்ற இனப்பிரச்சினையின் பரிமாணத்தை மாற்றி மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் இருக்கக் கூடிய ஓர் அதிகாரப் போட்டி என்ற புதிய வடிவத்தை கொடுப்பதற்கு துணைபோகின்றனர்.
வெளிசத்திகள் தத்தமது நலன்களை இத்தீவில் நிலைநிறுத்திக்கொள்வதற்காக இத்தேர்தலில் தமிழ் மக்களை முழுமையாகப் பங்கேற்க வைத்து மாகாணசபையை தீர்வாக ஏற்றுக்கொண்டுள்ளனர் எனக்காண்பிக்க முயல்கின்றன.
அந்த யதார்த்தத்தினை உணர்ந்து தமிழ் மக்களின் நலன்களை மையமாக வைத்து இத்தேர்தலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையாக புறக்கணித்து நிற்கின்றது. எமது ஆதரவு எந்த ஒரு கட்சிக்கோ,சுயேட்சைக் குழுவிற்கோ இல்லை.
நாம் இத்தேர்தலில் தம்மை ஆதரிப்பதாக கூறுபவர்களிடத்தில் விழிப்பாக இருக்குமாறும் தயவாக வேண்டுகின்றோம்.
இத்தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் மாகாண சபைகளைத் தமிழ் மக்கள் தீர்வாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என யாரும் காட்ட முற்படின் அது 26 ஆண்டுகாலம் மாகாண சபைகளை நிராகரித்து நடைபெற்ற உரிமைப் போராட்டத்தில் உயிர் நீர்த்த அனைத்து ஆன்மாக்களுக்கும் செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகவே நாம் பார்க்கின்றோம்.
இத்தேர்தலில் பங்குபற்றுவதா? வாக்களிப்பதா? யாருக்கு வாக்களிப்பது? போன்ற தீர்மானங்களை நாம் ஒவ்வொரு தமிழ்
மக்களின் மனச்சாட்சிக்கே விட்டுவிடுகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.