வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சால் மாங்குளத்தில் கோழிக்குஞ்சுகள் விநியோகம்

வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை (20.12.2014) மாங்குளத்தில் கோழிக்குஞ்சுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

4

வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களது குடும்ப வருமானத்தை உயர்த்தும் நோக்கிலும், போசாக்கு நிறைந்த முட்டையை அவர்களது உணவில் சேர்த்துக் கொள்ளும் நோக்குடனுமே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாகவே மாங்குளத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி,உணவு வழங்கல், நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மாங்குளத்தில் அமைந்துள்ள அவரது இணைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கோழிக்குஞ்சுகளை வழங்கி வைத்தார்.

உள்ளூர்ரகக் கோழிகளுடன் நல்லினக் கோழிகளை இனங்கலந்து உருவாக்கப்பட்ட புதிய ரகமான கொல்லைப்புறக் கோழிக்குஞ்சுகளே இவ்வாறு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இக்கொல்லைப்புறக் கோழிக்குஞ்சுகள் சாதாரண உள்ளூர்க்கோழிகளை விடக் கூடுதல் எடையைக் கொண்டதாக வளரக் கூடியவை என்பதோடு, உள்ளூர்க் கோழிகளைவிடக் கூடுதலான முட்டைகளையும் இடக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு, நல்லினக் கோழிகளைப்போல இவற்றைக் கூடுகளில் அடைத்து வளர்க்கவேண்டிய அவசியமோ, கோழிகளுக்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படும் உணவை வாங்கிப் போடவேண்டிய அவசியமோ இல்லாததால், இக் கொல்லைப்புறக் கோழிகள் பயனாளிகளுக்குக் கூடுதல் இலாபம் தரவல்லவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் சி. வசீகரன், முல்லைத்தீவு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் சி.கிரிஜகலா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Related Posts