மாகாணசபை உறுப்பினர்களின் ஒதுக்கீட்டில் மக்களுக்கு வழங்கப்படும் உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் அசமந்தப்போக்குடன் செயற்படுவதாக வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வட மாகாணசபையின் மாதாந்த அமர்விலேயே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குறிப்பாக தாம் முன்மொழிந்த மூன்று வேலைத்திட்டங்களை செயற்படுத்த முடியாதென்றும், இறுதி நேரத்தில் வந்து மாற்று வேலைத்திட்டத்தை மூன்று நாட்களுக்குள் முன்வைக்குமாறும் அதிகாரிகள் குறிப்பிட்டதாக தெரிவித்த அனந்தி, அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, ஜீ.ரி.லிங்கநாதன் மற்றும் தியாகராஜா ஆகியோரும் அதே குற்றச்சாட்டினை முன்வைத்தனர்.
இந்நிலையில், இப்பிரச்சினைக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள மீளாய்வுக் கூட்டத்தில் உரிய தீர்வை பெற்றுத்தருவதாக அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.