வட மாகாண அவைத்தலைவருக்கென புதிதாக வடிவமைக்கப்பட்ட சிம்மாசனத்தின் பெறுமதி 90ஆயிரம் ரூபாவெனத் தெரியவந்துள்ளது.
அண்மையில் வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திற்கு சோழ மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிம்மாசனம் போன்ற ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
தற்போது அச்சிம்மாசனத்தின் பெறுமதி 90ஆயிரம் ரூபாவெனவும், கடந்த 14ஆம் நாள் அமர்வில் சி.வி.கே சிவஞானம் அச்சிம்மாசனத்திலேயே அமர்ந்திருந்தார் எனவும் தெரியவந்துள்ளது.
வடமாகாணசபை உருவாகிய காலத்திலிருந்து இற்றை வரை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இதுவரை தனது சிம்மாசனத்தை மூன்று தடவைகள் மாற்றியுள்ளதாகவும், ஆனால், மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்ட ஆசனங்கள் மூன்று வருடங்களாகியும் இதுவரை மாற்றப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் மாகாணசபையில் நிதி வீண் விரயம் செய்யப்படுவதாக பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவைத்தலைவருக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இச்சிம்மாசனத்தில் அவர் ஒரேயொருநாள்தான் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.