வடமாகாண அவைத்தலைவரின் சாதுரியத்தால் தான் எதிர்க்கட்சி தலைவர் தனது பதவியை தக்க வைத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபை கடந்த மூன்றரை வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பில் , மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் அண்மைக்காலங்களில் தன்னைப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கு எம்மைக் கையாலாகாதவர்கள் என்று சித்தரிக்கப்பார்க்கின்றார். தனது கட்சியில் வேண்டப்படாத ஒருவராக இருக்கும் அவர் பத்திரிகைகளில் தஞ்சம் புகுந்திருப்பது விளங்கக்கூடியதொன்றுதான்.
எமது கௌரவ அவைத்தலைவரின் சாதுரியத்தால் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை தக்கவைத்துக்கொண்டிருக்கும் அவர் கடந்த 45 மாதங்களில் நாங்கள் எதுவுமே செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
ஒருவேளை அவர் அரசியலை விட்டு ஆத்மீகத்தினுள் நுழைந்துவிட்டாரோ என்று அப்பொழுது நினைத்துக்கொண்டேன். ஆத்மீகத்தில்த்தான் நாம் எதுவுமே செய்யவில்லை, இறைவன்தான் செய்விக்கின்றான் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. ஆனால் அவரின் கேள்விகள் அந்த அர்த்தத்தில் எழுப்பப்படவில்லை என்று தெரிந்துகொண்டேன்.
அதாவது நாங்கள் சனி, ஞாயிறு பார்க்காமல் ஒவ்வொரு நாளும் 15 இலிருந்து 18 மணித்தியாலம் வரை ஓயாது வேலை செய்து கொண்டிருக்கின்றோம். பலவற்றைச் செய்துமுள்ளோம். ஆனால் அவை தனது எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அமையவில்லை என்பது தான் அவரின் பிரச்சனை. அதனால்த்தான் நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
நாங்கள் பலதையும் செய்துள்ளோம். ஆனால் அவருக்கு அவற்றின் தாற்பரியமும் உண்மையும் தெரியாமல் செய்ததால் நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்பது அவரின் முறைப்பாடு. அவருக்குத் தெரியாமல் நடந்த பலவற்றின் உண்மை நிலையை நான் இங்கெடுத்துரைப்பதற்கு முன்னர் என் நண்பருக்கு ஒன்று கூறவிரும்புகின்றேன்.
உங்கள் எதிர்பார்ப்புக்கள், உங்கள் சிந்தனைகள், உங்கள் ஊகங்கள் யாவும் உங்களின் அறிவின் வரையறைகள், உங்களின் வாழ்க்கையின் பாதிப்புக்கள், உங்கள் கட்சியின் கொள்கைகள் பாற்பட்டவையே. நாம் எதை, ஏன், எவ்வாறு செய்கின்றோம் என்பதை எம்முடன் கலந்தாலோசித்தே நீங்கள் அறியவேண்டும். நீங்களாக உங்கள் முடிவுகளுக்கு வந்து பாப்பாண்டவரின் பகர்வுகள் போல்ப் பலதையும் பத்திரிகைகள் ஊடாகப் பலரறியப் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல என்று கூறி வைக்க விரும்புகின்றேன். பத்திரிகையில் பெயர் வரவேண்டும் என்பது தான் உங்களின் குறிக்கோளாக உள்ளதே ஒளிய உண்மையைத் தெரிந்து கொள்வதல்ல என்று நம்புகின்றேன்.
ஒருவேளை உங்கள் கட்சி உங்களை அடுத்த தேர்தலுக்கு முன் கட்சியில் இருந்து துரத்திவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் பல கட்சித்தலைமைகளுக்கும் உங்களை விளம்பரப்படுத்த இந்த ஏற்பாடோ நான் அறியேன் என தெரிவித்தார்.