வடமாகாண அபிவிருத்திகளுக்கான ஜனாதிபதி செயலணி இனிமேல் இயங்காது!

Task-forceமீள்குடியேற்றம் மற்றும் அந்த குடும்பங்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட வட மாகாண அபிவிருத்திப் பணிகளை கையாள்வதற்காக, புதிய நல்லிணக்க பணியகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

இதுவரை காலமும் இப்பணிகளை முன்னெடுத்து வந்த ஜனாதிபதி செயலணி செயலிழக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த புதிய நல்லிணக்க பணியகம் உருவாக்கப்படவுள்ளது.

வடமாகாண அபிவிருத்திகளுக்கான ஜனாதிபதி செயலணி இனிமேல் இயங்காது என்று, அமைச்சுக்கள், அரசாங்க திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கைகளில், ஜனாதிபதி செயலணி இனி நடைமுறையில் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமக்கு ஜனாதிபதி செயலணியின் செயலாளர் டி.திவாரட்ண அறிவித்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலணியானது குறிப்பிட்ட காலத்துக்கென நியமிக்கப்பட்டதெனவும் அக்காலம் தற்போது முடிவடைந்து விட்டதெனவும் அறிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இன்னும் 23 ஆயிரம் பேர் மீள்குடியேற்றப்பட உள்ளனர். இவர்கள் நலன்புரி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். பலர், இராணுவ ஆக்கிரமிப்பினால் தமது இடங்களில் குடியேற முடியாமல் உள்ளனர்.

மீள்குடியேற்றம் மற்றும் அந்த குடும்பங்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல், வட மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி, சமூக உட்கட்டமைப்பு விருத்தி, புனர்வாழ்வு, பொருத்தமான உபாயங்கள், திட்டங்கள், நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்காகவே ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டது. இதில் 19 பேர் அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts