ஒரு சேவையில் இணைந்தால் அதிலே எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஏனோதானோ என இருந்து ஓய்வுபெறுவதைத் தவிர்த்து, எமது வடமாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும்’ என்ற நோக்குடன் முன்னேற்றகரமாக செயற்படுங்கள் என
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் இணையத்தள அங்குரார்ப்பணம் நேற்று வெள்ளிக்கிழமை (26) யாழ்ப்பாணம் மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றபோது, இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்த பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கூறுகையில்,
‘சில தசாப்தங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் அல்லது வடபகுதியில் இயங்கிய அனைத்து அலுவலகங்களும் ஏனைய மாகாணங்களில் இயங்கிய அலுவலகங்களுக்கு அல்லது திணைக்களங்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கின. ஆனால் இன்றைய நிலையோ எம்மை கையாலாகாதவர்களாக மாற்றிவிட்டன.
எந்தவொரு விடயமாயினும் மத்திய மாகாணத்தை கேட்டுப் பாருங்கள் அல்லது மேல் மாகாணத்தைக் கேட்டுப் பாருங்கள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம். இதற்கான வலுவான காரணம் நாம் சேவையில் இணைந்துவிட்ட பின் தொடர்ந்து கற்கின்ற பழக்கத்தை அடியோடு மறந்துவிட்டுள்ளோம்.
எமது முயற்சிகள் முழுவதும் பொருள் ஈட்டலிலும் குடும்பத்தை மேன்நிலைப்படுத்துவதிலும் மட்டுமே கழிந்து போகின்றன. சுயமேம்பாட்டில் நாட்டம் கொள்வதில்லை. இதனாலேயே இன்று பலர் என்ன சேவையில் இணைந்தார்களோ அதேசேவையில் இளைப்பாறும் வரை ஏனோதானோ என இருந்துவிட்டு ஓய்வு பெறுகின்றார்கள். இந்நிலைகளில் இருந்து மாற்றம் பெறுவது அத்தியாவசியமாகின்றது. எம்மவர்கள் முன்பு இருந்த நிலைக்கு உயர்வுபெற வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் பாடுபடவேண்டும். நாம் ஒவ்வொருவரும் இந்த வடமாகாணத்தைக் கட்டி எழுப்புவதில் ஏதோ ஒரு பங்கை வகிக்கின்றோம் என்ற எண்ணம் எம்மிடையே மேலோங்க வேண்டும். நாம் நினைத்தால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை.
யாழ். மாநகர சபையின் நிர்வாக அலகுகளில் காணப்படுகின்ற அல்லது ஏற்படக்கூடிய குறைபாடுகளை இனம் காண்பதற்கும் அவற்றை சீர்செய்வதற்குமான ஆலோசனைகளை வழங்குவதற்கென ஒரு ஆலோசனைக்குழு ஸ்தாபிக்கப்பட்டிருப்பது மிகவும் வரவேற்புக்குரியது.
இந்த ஆலோசனைக்குழுவில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் துறை சார்ந்த விற்பன்னர்களாக காணப்படுகின்றனர். பொறியியல், நிர்வாகம், திட்டமிடல், காணிப்பங்கீடு, கல்வி, மருத்துவம், கட்டடம், நீதி, நீர்ப்பாசனம் என பல்துறைசார் விற்பனர்களும் இதில் அங்கத்துவம் வகிப்பது போற்றப்பட வேண்டியது. இந்த 11 அங்கத்தவர்களின் தெரிவுகளும் முறையாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு கிடைக்கப்பெற்ற 42 விண்ணப்பதாரிகளை நேர்முகப் பரீட்சை மூலம் தேர்ந்தெடுத்தலினால் நடைபெற்றன.
மாநகர சபையின் பல வேலைத்திட்டங்கள் இன்று தடங்கியுள்ள நிலையில் இக்குழு தமது ஒத்துழைப்பை வழங்கி அவசரமானதும் அவசியமானதுமான கழிவகற்றல், மீள்சுழற்சி முறை ஆகிய விடயங்களில் உடனடிக் கவனம் செலுத்துவார்கள்’ என எண்ணுகின்றேன் என்றார்.