வடமாகாணத்தில் நியமனம் பெற்ற தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பபடுவர்!

வடமாகாணத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம் உட்பட வடமாகாணத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பின் கீழ் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இன்று (30-10-2023) காலை பிரதமரோடு கலந்துரையாடி இருந்தேன். வடமாகாணத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மை மக்கள் தமிழ் பேசுகின்ற மக்கள். தொழில் வாய்ப்புகளை வழங்குகின்றபோது தமிழ் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் சில தவறுகள் நடந்திருக்கின்றன. அது உடனடியாக களையப்பட வேண்டும் என்று சொல்லி இருந்தேன் இதற்கு முன்னர் அமைச்சரவையிலும் அவரோடு கலந்துரையாடி இருக்கின்றேன்.

ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் தென்னிலங்கையில் இருந்து நியமிக்கப்பட்டு இங்கு வருவதாக அறிந்து தான் அதனை உடனடியாக நிறுத்துமாறும், இங்கிருக்கின்றவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சொல்லியபோது அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார். அடுத்த அடுத்த கிழமைகளில் இவை நடைமுறைக்கு வரும்.

தற்போது வந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கு இங்கு மொழிப் பிரச்சனை, தங்குமிட பிரச்சினைகள் இருக்கின்றது, இதனால் அதற்கே அவர்கள் உழைப்பது செலவுக்கே போய்விடும்.

இது ஒரு அறியாமையில் செய்யப்பட்ட விடயமா அல்லது உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட விடயமா என்பது வேறு. என்னை பொறுத்தவரையில் நான் இதற்கு இடம் கொடுக்க மாட்டேன்.

கடந்த காலத்தில் நல்லாட்சி என்ற பெயரில் இங்கு நடந்தது போன்று நான் இங்கு நடக்க விட மாட்டேன்.

ஏற்கனவே தொல்லியல் திணைக்களத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் தொடர்பாக மீண்டும் கேள்வி எழுப்பியபோது அவர்களும் திருப்பி அனுப்பபடுவார்கள் – என்றார்.

Related Posts