வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வடமாகாண சபை உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற மாகாண சபையின் 33ஆவது அமர்வில் எதிர்க்கட்சி தலைவர் சி்.தவராசா எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பின்னர் மாகாண, மாவட்ட, பிரதேச ரீதியாக இடம்பெறும் குற்றங்கள் தொடர்பாகவும் அவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை குழுக்களை நியமித்துள்ளோம்.
இதனடிப்படையில் தற்போது வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில் இந்த செயற்திட்டம் மாகாண பிரதம செயலாளரினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வடமாகாணத்தில் சட்டம் ஒழுங்கு நிச்சயம் சீர்செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
இதேபோன்று வீதி போக்குவரத்து நடைமுறையும் சீர்செய்யப்படும் என முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிடுகையில்,
மாகாணத்தில் வீதி விபத்துக்கள், அதிகரித்துள்ளன. இதனால் இவ்வாண்டு 32 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 877 பேர் மூளை பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 906 பேர் எலும்பு முறிவுக்குள்ளாகியுள்ளனர் எனவும் போதைப்பொருள், குழு மோதல்கள், என வன்முறைகள் அதிகரித்திருக்கும் நிலையில் முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை கையிலெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.