வடமாகாணத்தில் குறித்த திகதியில் ஆசிரிய இடமாற்றம் நிகழும்

வடமாகாண ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றம் எதிர்வரும் முதலாம் தவணையிலிருந்து அமுலுக்குவரும் என்று, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மீண்டும் உறுதிபட தெளிவுபடுத்தியுள்ளார்.

சங்கத்தின் பொதுச் செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே, மேற்கண்ட உறுதி வழங்கப்பட்டள்ளது. அந்தச் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘16.12.2016 திகதி அன்று வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில், இடமாற்றத்துக்காக விண்ணப்பித்த ஆசிரியர்களின் மேன்முறையீடு, வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் தலைமையில், இடமாற்ற சபையில் பரிசீலிக்கப்பட்டது.

அதில், வருடாந்த இடமாற்றத்துக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களில், இடமாற்றத்துக்கு தகுதியான அனைவருக்கும், எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல், ஆசிரியர்களால் கோரப்பட்ட கல்வி வலயங்களுக்கு இடமாற்றம் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது. இதில் ஒரு வலயத்திலிருந்து மற்றொரு வலயத்துக்கு விண்ணப்பித்த, தகுதி பெற்ற ஆசிரியர்கள் அனைவரும், இடமாற்றம் அமுலுக்கு வரும் போது, புதிய பாடசாலைகளில் கடமைப்பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்ற சபையில், எந்தவித அரசியல் தலையீடுகளுக்கோ, சிபார்சுகளுக்கோ முன்னுரிமை வழங்காமல், முறையான இடமாற்றம் இடம்பெற்றுள்ளன. கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில் ஓரிரு அரசியல் சார்ந்த சிபார்சுகள் இருந்தும், அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல், இடமாற்ற சபையின் தீர்மானங்களுக்கமைய முடிவுகள் எடுக்கப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடமாற்றக் கடிதங்கள் கிடைக்கப்பெறாத ஆசிரியர்கள், எந்தவொரு சிபாரிசும் இன்றி நேரடியாக மாகாணக் கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு, அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts