வடமாகாணத்தில் கழிவுகளிலிருந்து மின்சாரம் பெறுவதற்கான திட்டம் தொடர்பாக ஆராய்வு

வடமாகாணத்தில் கழிவுகளில் மின்சாரம் பெறுவதற்கான திட்டத்துக்கு வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தம்மிடம் விண்ணப்பித்திருப்பதாகவும் அது தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாகவும் வடமாகாண சுற்றுச்சூழல் மற்றும் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், இன்று சனிக்கிழமை (27) தெரிவித்தார்.

2

வடமாகாண சுற்றுலா துறை ஒன்றியம், வடமாகாண சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில், ‘வடமாகாண சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல்’ என்னும் மாநாடு இன்று (27) ரில்கோ விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தீவுப்பகுதிகளில் குடிநீர்ப்பிரச்சனையை தீர்க்கும் முகமாக கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு புலம்பெயர் வாழ் தமிழர்கள் முன்வந்துள்ளார்கள். அதற்குரிய திட்டங்கள் வடமாகாண சபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சகல தடைகளையும் தாண்டி வடமாகாண சபையால் இத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்த அவர், பளைப்பகுதியில் காற்றின் மூலம் மின்சாரத்தை பெறும் வேலைத் திட்டமொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இம்மாநாட்டின் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கலந்து கொண்டதுடன் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண உள்ளூராட்சி செயலாளர் எஸ்.திருவாகரன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் பி.கஜதீபன் மற்றும் பிரதேச சபை, நகரசபை தவிசாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இம் மாநாட்டில் வடமாகாண சுற்றுலாத் தலங்கள் தொடர்பான வழிகாட்டல் நூல் வெளியிப்பட்டது.

இந்நூலை வடமாகாண உள்ளூராட்சி செயலாளர் எஸ். திருவாகரன் வெளியிட்டு வைக்க வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

Related Posts