வடமாகாணத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடமாகாணசபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மீதான குழு நிலை விவாதம் நேற்று (வியாழக்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், எங்களுடைய மாணவர்கள் இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு சென்று அதிகளவான பணத்தை செலவிட்டு மருத்துவ படிப்பை தொடர்கின்றார்கள். எதற்காக நாம் அதிகளவு பணத்தை பிற நாடுகளில் முதலீடு செய்ய வேண்டும்?
வடமாகாணத்தில் தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றை அமைப்பதற்கான விண்ணப்பத்தை புலம்பெயர் தமிழர்களிடம் முன்வையுங்கள். புலம்பெயர் தமிழர்களுக்கு 500 கோடி என்பது பெரிய விடயமல்ல. எனவே அவ்வாறு அவர்களிடம் விண்ணப்பம் ஒன்றை வழங்கிய பணத்தை பெற்று தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றை அமையுங்கள்.
அதில் இலங்கையின் அனைத்து பகுதிகளை சேர்ந்த மாணவர்களும், ஏன் வெளிநாட்டு மாணவர்களும் கூட கல்வியை தொடரலாம். அதன் ஊடாக எமது மாணவர்களுக்கு அதிகளவு பயன்கள் கிடைக்கும். எனவே அந்த விடயம் தொடர்பாக சிந்தியுங்கள் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், எங்களுடைய மாணவர்கள் இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் மருத்துவ படிப்பை தொடருவதற்காக அதிகளவு பணத்தை செலவிடுகின்றார்கள் என்பது உண்மையே. ஆனால் தனியார் மருத்துவ கல்லூரியை வடக்கில் அமைப்பது தொடர்பாக நான் இப்போதைக்கு பேச விரும்பவில்லை. அதற்கு காலம் பதில் கூறும் என்றார்.