வடமாகாணசபையானது கடந்த 03 மாதங்களாக சிறப்பாகச் செயலாற்றி வருவதாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
க.பொ.த உயர்தர பரீட்சையில் அதிவிசேட சித்திகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் வடமாகாண அமைச்சர்களுக்கும் ஆளுநர் ஒத்துழைப்பு இருக்க வேண்டும். அத்துடன் வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண நிறைவேற்று அதிகாரிகளும் வடமாகாண சபைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறான ஒத்துழைப்புக்கள் மாகாண சபையுடனும் மத்திய அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், கடந்த நான்கரை வருடங்களாக கல்வித்துறையில் மாணவர்கள் சிறந்த அடைவு மட்டத்தை அடைந்துள்ளனர்.
வடமாகாணத்தின் கல்வி மட்டம் 2009ஆம் ஆண்டு பூச்சிய மட்டத்தில் இருந்தது. இந்த நிலையில், இது தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகின்றமை சந்தோஷத்திற்குரியது. இம்முறை தேசிய ரீதியில் கணித பிரிவில் 3ஆம் இடம்பெற்றிருப்பது வடமாகாணத்தின் கல்வி மட்டம் அதிகரித்துச் செல்வதைக் காட்டுகின்றது எனவும் அவர் கூறினார்.