வடக்கு மாகாணசபையின் பின்னடைவிற்கான காரணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். – சாவக்கச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வடக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்றது. இதன் பின்னர் அமர்வுகளும் ஆரம்பமானது. இதன் பின்னர் அமெரிக்காவின் நியூஜெர்சியில் நடைபெற்ற புலம்பெயர் தமிழ் மக்களினால் பங்குபற்றிய கையேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு நிலைப்பாட்டை முன்வைத்தார்.
அந்த நிலைப்பாடானது என்னவெனில், வடக்கு மாகாண சபையை வழிநடத்தும் கூட்டமைப்பு, 13 ஆம் திருத்தம் பயன்பாடற்ற ஒரு தீர்வு என்பதை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே அந்த அதிகாரங்களை காண்பிக்க வேண்டுமே தவிர, அந்த அதிகாரங்களை கொண்டு தமிழ் மக்களுக்கு எதுவும் செய்ய கூடாது என்று தனது நிலைப்பாடாக அவர் அங்கே கொடுத்தார்.
நாங்கள் இருக்கின்ற அதிகாரங்களை பாவித்து சேவை செய்து விட்டால் இது போதும் என்று சொல்லிவிடுவார்கள். ஆகவே இதை சேவைக்காக பயன்படுத்தக் கூடாது. இது போதாது என்பதை காட்டுவதற்கு மட்டுமே நாம் இந்த சந்தர்ப்பத்தை உபயோகிக்க வேண்டும் என அவர் முன்வைத்துள்ளார்.
அப்பிடியான ஒரு நிலைப்பட்டிருக்குள்ளே துரதிஸ்டவசமாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் சென்ற காரணத்தினாலேயே வடக்கு மாகாண சபை இந்த நிலைமைக்கு செல்ல காரணமாக அமைந்தது.
எதற்காக மக்கள், வடக்கு மாகாணசபையை தேர்வு செய்தார்களோ அதனை நிறைவேற்ற முடியாமல் போக காரணமாக அமைந்தது” என கூறியுள்ளார்.