வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுடனோ அல்லது வட மாகாணசபையுடனோ எவ்விதத்திலும் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள அரசு தயாராக இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுடன் பேச்சு நடத்தி, மத்திய மாகாண அரசுகளின் செயற்பாடுகளை வரையறுத்து செயற்படுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்தியும் – மாகாணசபையும் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிகவும் நல்லவர். அவரை எனக்குத் தனிப்பட்ட முறையிலும் நன்கு தெரியும். கொழும்பில் உயர் நீதிமன்றத்தில் நீதியரசராகப் பணியாற்றியவர்.
அவருக்கு நாட்டின் சகல விதமான சட்டவரையறைகள் பற்றியும் நன்கு தெரியும்.
எனவே அவர் வடக்கு மாகாண சபையின் தலைமைப் பதவிக்கு மிகவும் பொருத்தமானவராகக் காணப்படுகிறார்.
அவருடனோ அல்லது வடக்கு மாகாண சபையுடனோ எந்தவிதமான முரண்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்ள அரசு தயாராக இல்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“அவருடன் கலந்துரையாடி வடக்கு மாகாணசபையின் நிர்வாகத்திலுள்ள குறைபாடுகளைக்களைய வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் அங்கே சில நிர்வாக முறைகேடுகள் இருந்தமை உண்மையாக இருக்கலாம்.
அவற்றை இனியும் தொடரவிடாது மத்திய அரசும், மாகாண அரசும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாகச் சிந்திக்க வேண்டும்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பேச்சு நடத்தி மத்திய மற்றும் மாகாண அரசுகளின் செற்பாடுகளை வரையறுத்து செயற்படுவதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். மத்திய அரசும் மாகாண அரசும் ஒன்றையொன்று குற்றம் சாட்டுவதனால் இரு தரப்புக்குமே பாதிப்பு. அதனால் மக்களும் பாதிப்படைவர். பரஸ்பரம் விட்டுக்கொடுப்பு மூலமாக அடுத்தகட்ட நகர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும்.
இது புதிய அரசு. எம்மிடம் புதிய கொள்கைகள் உள்ளன.” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.