யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறைப் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்தார். நேற்றைய தினம் இடம் பெற்ற இந்தச் சம்பவத்தில் 7 பிள்ளைகளின் தந்தையாரான 51 வயதுடைய சின்னத்தம்பி இராஜசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மேற்படி பகுதியில் வசிக்கும் தனது இளைய மகளான அனுஜா சசிகரனிடம் நேற்று முன்தினம் மாலை இவர் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் தன்னிடம் பணமில்லையெனக் கூறவே அவரது வாயைப் பொத்தி இவர் அடித்ததனால் அவரது நாக்கு இரண்டாக கடிபட்டு உடனடியாக மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மந்திகை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பின்னணியிலேயே மாமன் மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இவர் மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரும் வேளை இடையில் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சுப்பிரமணியம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலத்தை உரியவரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.