வடமராட்சி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்!

யாழ்.வடமராட்சி கடலேரி நீர் வளத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார்.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் யாழில் 16 நீர்வளத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், இவற்றின் மூலம் 9 சதவீதமானவர்களுக்கே குழாய் நீர் வசதிகளை வழங்க முடிந்துள்ளதென குறிப்பிட்ட அமைச்சர், யாழில் பொருத்தமான நீர் விநியோகத்தை நடைமுறைப்படுத்துவதில் பல தடைகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் வடமராட்சி கடலேரி நீர்வளத்தை சுத்திகரித்து, அதன்மூலம் குடிநீரை வழங்குவதற்காக நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இத்திட்டம் தொடர்பில், சம்பந்தப்பட்ட அரச நிறுவனம் மற்றும் வடக்கு மாகாண சபையுடன் இணைந்து பூரணமான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டார்.

Related Posts