யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் உடுத்துறைப் பகுதியில் நேற்று நள்ளிரவு யானைத் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. மேலும் இந்த தாக்குதலுக்கு இலக்கான இருவர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரியவந்துள்ளது.
நேற்று நள்ளிரவு வேளையில் வடமராட்சி கிழக்கு ஆழியவளை மற்றும் வெற்றிலைக்கேணிப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் காணப்பட்டதாகவும் இதனை அறிந்த மக்கள் வனவள பாதுகாப்புபிரிவினருக்கு தகவல் வழங்கியதோடு யானைகளை விரட்டுவதற்காக மக்கள் பாரிய நெருப்பினையும் அவ்விடத்தில் மூட்டியுள்ளனர்.
இந்த நிலையிலேயே அதே பிரதேசத்தைச் சேர்ந்த உடுத்துறைப் பகுதியில் மூன்றுபேரை யானை தாக்கியதாகவும் இதனால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தற்போதைய செய்திகள் கூறுகின்றன.
பாரிய பெருங்காடுகள் இல்லாத யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த திடீர் யானைத் தாக்குதலானது மக்களிடையே பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்