வடமராட்சி பகுதியில் காரில் வந்த கொள்ளை கும்பலொன்று, ஒரு மணி நேரத்தில் மூவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
வடமராட்சி- வல்லை மற்றும் வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வல்லை பகுதியில் வெள்ளை நிற காரில் நின்ற வழிப்பறி கொள்ளையர்கள், வீதியால் வந்த ஒருவரை மறித்து தடுப்பூசி அட்டையை காட்டுமாறு கோரியுள்ளனர்.
அதற்கு அவர் தடுமாறிய நிலையில் அவரிடம் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு, கொள்ளை கும்பல் காரில் ஏறி அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.
அதன்பின்னர் குறித்த கும்பல், வல்வெட்டித்துறை பகுதியில் உழவு இயந்திரத்தில் கல் ஏற்றி வந்தவரை மறித்து கல் ஏற்றி செல்ல அனுமதிப்பத்திரம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பி, அவரிடம் இருந்த ஒரு தொகை பணத்தினை பறித்துக்கொண்டு, காரில் ஏறி அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
இவ்வாறாக குறித்த வழிப்பறி கொள்ளை கும்பல், அப்பகுதியில் ஒரு மணி நேர இடைவெளியில் மூன்று நபர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், காரினுள் அங்கவீனமுற்றவர்கள் பயன்படுத்தும் கைத்தடி ஒன்றும் காணப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளனர்.