வடமராட்சிக் கடல் பரப்பில் கடந்த சில வாரங்களாகச் சீன மீனவர்களின் ஆக்கிரமிப்பால் தாம் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று தமிழ் மீனவர்கள் குமுறுகின்றனர்.
“பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போன்று, இந்திய மீனவர்களின் இழுவைப்படகுத் தொழிலால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நாம், சீன மீனவர்களினாலும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார் மீனவர் சங்கப் பிரதிநிதி ஒருவர்.
அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில், அரச அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவிடம் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டபோதும் அது பற்றி அவர் கருத்துத் தெரிவிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை என்றும் மீனவர் சங்கப் பிரதிநிதி கூறினார்.
இலங்கை முதலீட்டுச் சபையின் அனுமதியுடன் இலங்கைக் கொடியுடன் மீன்பிடியில் இறங்கியிருக்கும் சீனப் படகுகளாலேயே தமது தொழில் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“சீனப் படகுகளும் எமது வலைகளை அறுத்தெறிந்து நாசம் செய்கின்றன. பல லட்சங்களைக் கடனாகப் பெற்றுவாங்கிய வலைகளை ஒரே இரவில் இவை நாசம் செய்து போகின்றன. இப்படியே இந்தியாகாரன் சீனாக்காரன் என்று எங்களைத் தொழில்செய்ய விடாவிட்டால் தற்கொலைதான் செய்துகொள்ள வேண்டும்” என்றார் அவர்.
இலங்கையின் அருகேயுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் இலங்கைக் கொடியுடன் மீன்பிடிப்பதற்கே சீனப் படகுகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. “ஆனால் அதையும்தாண்டி வடமராட்சிக் கடல் எல்லைக்குள் புகுந்து சீனப் படகுகள் மீன்பிடிக்கின்றன” என்கிறார்கள் தமிழ் மீனவர்கள்.