ஊழியர்களுக்கான சம்பள நிலுவைகள் வழங்கப்படாமையினாலும், போதியளவு பேரூந்துகள் இன்மையானலும், இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சேவைகள் முற்றாகச் செயலிழக்கும் அபாயம் காணப்படுவதாக தெரியவருகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,இலங்கைப் போக்குவரத்து சபையின் வடபிராந்திய அலுவலகத்தினருக்கு கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாத்திற்கான சம்பள நிலுவைகள் இதுவரையில் வழங்கப்படவில்லை.
இதனால் ஊழியர்கள் தமது வாழ்க்கைச் செலவை கொண்டு செல்வதில், பாரிய இன்னல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, போக்குவரத்து சபையின் சேவைகள் அடுத்து வரும் நாட்களில் முடங்கும் அபாயம் உள்ளதாக தெரியவருகின்றது.
இதுதவிர, தற்போது சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து பேரூந்துகளும்15 முதல் 20 வருடங்கள் பழமையானவை எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதனால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி சாலையில் மாத்திரம் சுமார் 35 பேரூந்துகள் வரையில், ஓட முடியாத நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக, கிளிநொச்சி சாலையில் உள்ள 21 பேரூந்துகளில் 7 பேரூந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிதாக 25 இற்கும் அதிகமான பேரூந்துக்கள் வழங்கப்பட்டால் மட்டுமே பொது மக்களுக்கு சிறப்பான சேவையை எதிர்காலத்தில் வழங்க முடியும் எனவும் இலங்கைப் போக்குவரத்து சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், வடபிராந்திய போக்குவரத்து அலுவலகத்தில் கருத்து தெரிவிக்கவல்ல அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, இரண்டு மாதங்களுக்கான சம்பள நிலுவைகள் எமது தலைமையச் செயலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படவில்லை இதனாலேயே சம்பளங்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
இவை தொடர்பில், பிராந்திய முகாமையாளரிடம் வினவியபோது, கணக்கு பகுதி தவிர ஏனையவர்களுக்கு இரண்டு மாதங்கள் சம்பள நிலுவைகள் வழங்கப்படவில்லையென்பதை உறுதிப்படுத்தினார்.
மேலும் தமது பேரூந்துகள் பல உதிரிப்பாகங்கள் இன்மையால் இன்றும் தரிப்பிடத்திலேயே உள்ளதாகவும், தமது பேரூந்துகளில் மிக அதிகமானவை பழையவை என தெரிவித்ததோடு, தமது பேரூந்துகள் என்பதால் தொடர்ச்சியாக பழுதடைந்து வருவதாகவும் இப்போது புதிய பேரூந்துகள் தேவையென்றும் அவர் தெரிவித்தார்.