வடபகுதி மக்கள் சுதந்திரமாக இல்லை;- நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர்

P-vasanthakumarவடபகுதியில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும் தென் பகுதி மக்களுக்குக் கிடைத்திருக்கக் கூடிய சுதந்திரமான வாழ்க்கை வடபகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை.

இவ்வாறானதொரு சூழலிலே மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப.வசந்தகுமார் தெரிவித்தார். தென்பகுதியில் இருந்து யாழ்.மாவட்டத்துக்கு வருகைதந்த பிரதேச சபை மற்றும் நகரசபை உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தலைமையுரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழ் மக்கள் கடந்த காலங்களில் ஜனநாயக வழியில் போராட்டங்களை நடத்தினார்கள். இந்தப் போராட்டங்கள் தோல்வியடைந்த நிலையில் ஆயுதம் ஏந்திப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

தென்பகுதி மக்கள் சுதந்திரமாக இருப்பதைப் போன்று வட பகுதி மக்களுக்கு அந்த வாழ்க்கை கிடைக்கவில்லை. எனவே தென்னிலங்கைப் பகுதிகளில் இருந்து வடபகுதிக்கு வந்துள்ள இந்தக் குழு இங்குள்ள மக்களின் பிரச்சினைகள், அவர்களின் உரிமைகள், தேவைகள் தொடர்பாகக் கேட்டறிந்து அவற்றைத் தென்னிலங்கை மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் தென்னிலங்கையைச் சேர்ந்த பிரதேசசபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், நல்லாட்சி மன்றத்தின் குழு உட்படப்பலர் கலந்துகொண்டனர்.

Related Posts