வடபகுதி மக்களின் ஒற்றுமை சகல மக்களுக்கும் முன்மாதிரியாக அமையவேண்டுமென தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ஒற்றுமையே தற்போது அவசியமான ஒன்றென சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக கடைத்தொகுதியை, அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட கிளி.வர்த்தகர்களுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கையளித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”யாவரதும் ஒத்துழைப்பே இன்றைய காலகட்டத்தில் வடமாகாணத்தின் தேவையாக உள்ளது. வேறுபாடுகள், வித்தியாசங்கள் காட்டாது ஒரு நல்ல காரியத்திற்காக ஒன்றுபட்டு செயற்பட சகலரும் முன்வரவேண்டும். இதைத்தான் கிளிநொச்சி மக்கள், ஏனைய மக்கள் யாவருக்கும் எடுத்துரைத்துள்ளார்கள்.
சுனாமியின் போது இலங்கை இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார்கள். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பின்னர் ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்ற கதைப்படி இரு பகுதியினரும் பிரிந்து விட்டார்கள்.
இன்றைய காலகட்டத்தில் ஒற்றுமை ஒன்றே எம்மை வழிநடத்திச் செல்லும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் பத்திரிகையில் ஒரு செய்தியை படித்தேன். வடமாகாண மக்கள் சாதியாலும் வர்க்கத்தாலும் கல்வி வேற்றுமைகளாலும் மதத்தாலும் வேற்றுமைப்பட்டு, முன்னேற முடியாமல் ஒருவருக்கொருவர் முரண்பட்டு இருப்பதாக வடக்கு ஆளுநர் கூறியிருந்தார்.
இன்றைய உங்கள் ஒற்றுமைச் செயற்பாடு, அவரது அந்த அவதானத்தை பொய்மைப் படுத்துத்துவதாக அமைந்துள்ளது. எம்மக்கள் சாதி, சமய, வர்க்க, மத வேறுபாடுகளைக் கடந்து ஒருமித்து உழைத்து மிகக் குறுகிய காலத்தினுள் வெற்றியடையக் கூடியவர்கள் என்பதை கிளிநொச்சி மக்களாகிய நீங்கள் இன்று அவருக்குப் பதிலளித்துள்ளீர்கள். உங்கள் ஒற்றுமை எம் எல்லோருக்கும் முன்மாதிரியாக அமைய வேண்டும்” என்றார்.