பாலஸ்தீனத்தை எவ்வாறு இஸ்ரேல் இராணுவம் ஆக்கிரமித்து உள்ளதோ, சீனா எவ்வாறு திபெத்தை ஆக்கிரமித்து உள்ளதோ அதேபோலவே இலங்கையில் வடக்குப் பிரதேசத்தினை இராணுவம் ஆக்கிரமித்து உள்ளது’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் நேற்று செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தார்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெறவிருந்த போராட்டம் கண்டனக்கூட்டமாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
வட மாகாணத்திலுள்ள மக்கள் தொகை 10 இலட்சம் தான். ஆனால் வடமாகாணத்தில் 1 இலட்சத்து 50 ஆயிரம் இராணுவம் நிலைகொண்டுள்ளது. என்பதனூடாக எவ்வாறான இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வடக்கு மக்கள் அகப்பட்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும். முன்பள்ளியில் ஒரு விளையாட்டுப்போட்டி நடத்தப்பட்டாலும் அங்கு இராணுவம் அழைக்கப்பட வேண்டும் என்பது வடக்கிலுள்ள கட்டாயமான நிலைமை.
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் 84 ஆயிரம் விதவைகள் உள்ளனர் என்று அரசாங்க புள்ளிவிபரம் கூறுகின்றது. இந்த 84 ஆயிரம் பேர் போரினால் விதவைகள் ஆகியுள்ளார்கள் என்றால் 84 ஆயிரம் பேர் போரிலே கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும், இந்த விதவைகளுக்கு ஒரு வாழ்வாதாரத்தை கூட அரசாங்கம் இதுவரை செய்து கொடுக்கவில்லை.
வலி. வடக்கிலே மீள்குடியேற்றப்பட வேண்டியவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் வாழ்வாதாரம் கடலுக்கு சென்றால் தான் உண்டு. ஆனால் அரசாங்கம் இன்றுவரை அவர்களை மீள்குடியேற அனுமதிக்கவில்லை.
இந்த மீனவ சமூகத்தவர்கள் காட்டிலே போய் குடியேறி காட்டிலே மீன்பிடிக்க முடியாது. ஆகவே அவர்கள் சொந்த இடங்களிலே குடியேறினால் தான் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெற்றுகொள்ளலாம். இவர்களின் வாழ்வாதாரங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எந்தவிதக் கவலையும் இல்லை.
அதேபோல கொக்கிளாய், மணலாறு போன்ற பிரதேசங்களில் சிங்கள மீன்பிடி சமூகத்தவர்களை கொண்டுவந்து குடியேற்றி அங்குள்ள தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பிடுங்குகின்றார்கள். இவ்வாறு இலங்கை அரசாங்கம் சிங்கள, தமிழ் மக்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, அவர்களுக்கு இடையில் பாரிய விரிசல் ஏற்படக் கூடியவாறான நடவடிக்கைகளில் தான் ஈடுபடுகின்றது’ என மேலும் தெரிவித்தார்.