மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுனாவ பிரதேச விடுதியொன்றிலிருந்து வட மாகாணத்தைச் சேர்ந்த 13 இளைஞர்களை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு கைது செய்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாராலேயே மேற்படி 13பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், நெடுங்கேணி, முள்ளியவளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர், மேற்படி இளைஞர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாகக் கூறி தலா 10 ஆயிரம் ரூபா வீதம் பெற்றுக்கொண்டுள்ளார்.
அவ்விளைஞர்களை மொரட்டுவையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக அவர் உறுதியளித்த நிலையிலேயே தாங்கள் இப்பகுதிக்கு வந்த குறித்த விடுதியில் தங்கியிருந்ததாகவும் கைது செய்யப்பட்ட இளைஞர்கள், பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
இவர்களிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.