வடக்கு விவசாய அமைச்சின்’சூழலியல் விவசாயத்தை நோக்கி’ என்னும் தொனிப்பொருளிலான மாபெரும் விவசாயக் கண்காட்சி எதிர்வரும் புதன்கிழமை (02.09.2015) ஆரம்பமாகவுள்ளது.
நல்லூர் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி நல்லூர் கோவில்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இக்கண்காட்சியை புதன்கிழமை மாலை 5 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் திறந்துவைக்க உள்ளார்.
அளவுக்கு மிஞ்சிய செயற்கை உரங்களினதும், இரசாயனக் களைகொல்லிகளினதும் பயன்பாட்டினால் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடிநீரும் மாசுபட்டு வருகிறது. விவசாய இரசாயனங்களின் வரம்பு மீறிய பாவனையால் ஏற்பட்டுவரும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு சூழலுக்கு இசைவான பயிர்ச்செய்கை முறைகள் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கோடு இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் இரசாயன உரவகைகள் மற்றும் பீடைகொல்லிக்கு மாற்றீடாகப் பயன்படுத்தக்கூடிய சேதனப் பசளைகள், சேதன பீடைநாசினிகள், ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவம், நிலத்தடிநீர் முகாமைத்துவம், பண்ணை இயந்திரங்கள், அருகிவரும் பயிர்களும் பழங்களும், பாரம்பரியப் பயிரினங்கள், காளான் வளர்ப்பு போன்றவற்றுடன் தொடர்பான காட்சிப்படுத்தல்கள் இடம்பெற உள்ளன. அத்தோடு, நடுகைப் பொருட்கள், சுதேச உணவுப்பொருட்கள் மற்றும் இயற்கைப் பழரசமென்பானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
15ஆம் திருவிழாவான புதன்கிழமை ஆரம்பமாக உள்ள இக்கண்காட்சி பூங்காவனத் திருவிழா வரையும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.