வடக்கு முஸ்லிம்களின் நலன்களை கருத்திற் கொண்டே கூட்டமைப்பில் போட்டியிடுகின்றோம்

tnaவடக்கு முஸ்லிம்களின் நலன்களை கருத்திற் கொண்டே வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் அரசியல் கூட்டு முன்னணி போட்டியிடுகின்றது என எந்த முன்னணியின் ஊடகப் பேச்சாளர் அஷ்ஷெய்க் நஜா முகம்மட் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்ப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிதைவடைந்துள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை மேம்படுத்தவும் வடக்கு முஸ்லிமகளின் மக்களின் நலன்களை கருத்திற் கொண்டுமே வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் அரசியல் கூட்டு முன்னணி போட்டியிடுகின்றது.

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு வாழ்வாதாரம், காணிப் பிரச்சினை போன்றவைகளை கருத்திற்கொண்டு அமையப்போகின்ற வட மாகாண சபையில் ஆட்சியமைக்கவுள்ள கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் அவர்களுடன் நாம் கூட்டுச்சேர்ந்து போட்டியிடுகின்றோம்.

அத்தோடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் சிதைவடைந்துள்ள தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தவும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இரு சமூகங்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புரிந்து கொண்டு ஐக்கியத்தை கட்டியெழுப்பவும் இந்த அரசியல் கூட்டு சிறந்ததொரு முன்னெடுப்பாக அமையும் என நாம் கருதுகின்றோம்.

அந்த வகையில்தான் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணி மற்றும் ஆய்வுக்கும் கலந்துரையாடலுக்குமான அமைப்பு ஆகிய அமைப்புக்கள் ஒன்று சேர்ந்த முஸ்லிம் அரசியல் கூட்டு முன்னணி வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுகின்றது.

வட மாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் எமது முஸ்லிம் அரசியல் கூட்டு முன்னணியின் சார்பிலான முஸ்லிம் வேட்பாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் களமிறக்கியுள்ளோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிடவுள்ள வட மாகாண சபை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முஸ்லிம்கள் தொடர்பாக உள்ளடக்க வேண்டிய விடயங்களை பரஸ்பரம் கலந்துரையாடி முன்வைத்துள்ளோம்.

அந்த விஞ்ஞாபனத்தில் வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அங்கு குடியேறியுள்ள முஸ்லிம்களின் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அவர்களின் வாழ்வதாரம் உட்பட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளுக்கான தீர்வு போன்றவைகள் உள்ளடக்கப்படுமென கருதுகின்றோம்.

இது தொடர்பிலான தேர்தல் ஒப்பந்தமொன்றை நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இன்னும் ஒரிரு தினங்களில் ஏற்படுத்தவுள்ளோம்.வடக்கு கிழக்கு மாகாணங்களில் நலிவடைந்துள்ள தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஒற்றுமையை கட்டி எழுப்பவும் சந்தேகங்களை களைந்து சமூக மீள்நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இந்த அரசியல் கூட்டுப்பயணத்திற்கு வடமாகாண முஸ்லிம்களின் பூரண ஆதரவு கிடைக்கும் என நினைக்கின்றோம்” என்றார்.

Related Posts