இலங்கையின் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்டியிருப்பதாகத் தெரிவித்து அவருக்கு எதிராகக் கண்டனப் பேரணியொன்று நேற்று வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெற்றுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் எல்லைப்புறமாகிய போகஸ்வௌ பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சிங்கள மக்களுடன், பொதுபலசேனா, இராவணா பலய உள்ளிட்ட பௌத்த கடும்போக்கு அமைப்புக்களைச் சேர்ந்த பௌத்த மதக் குருக்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
எழுக தமிழ் நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அங்கு ஆற்றிய உரையைக் கண்டித்து இந்தப் பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பதாதைகளும், சுலோக அட்டைகளும் ஏந்திச் செல்லப்பட்டன.
இனவாதக் கருத்துக்களை விக்னேஸ்வரன் தனது உரையில் வெளியிட்டதாகக் குற்றம் சாட்டிய பேரணியில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், எழுக தமிழ் நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள், அதில் கலந்து கொண்டவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் இந்தக் கண்டனப் பேரணியில் கோரிக்கை வைத்துள்ளனர்.
வவுனியா ஹொரவப்பத்தான வீதியில் ஆரம்பமாகிய இந்தப் பேரணி காவல் துறையினரின் பலத்தப் பாதுகாப்புக்கு மத்தியில் நகர வீதிகள் வழியாக நகர்ந்து அரச செயலகத்தைச் சென்றடைந்து ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு எழுதப்பட்ட மனுவை கையளித்தப் பிறகு முடிவடைந்தது.
நல்லிணக்கத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள வேளையில் சிங்கள மக்களை வடக்கில் குடியேற்றக் கூடாது. புத்தர் சிலைகளை நிறுவக்கூடாது, பௌத்த விகாரைகளை அமைக்கக் கூடாது என இனவாதக் கருத்துக்களை பொங்கு தமிழ் நிகழ்வில் அவர் வெளியிட்டதன் மூலம் நாட்டில் இனவாதத்தை தூண்டியிருப்பதாக இந்தக் கண்டனப் பேரணியில் உரையாற்றிய பொதுபல சேன அமைப்பின் செயலர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
இத்தகைய இனவாதக் கருத்துக்களை பெரும்பான்மை இன மக்களுக்கு எதிராகத் தொடர்ந்தும் தெரிவிப்பாரானால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசியமைப்பில் முதலிடம் வழங்கப்பட்டுள்ள பௌத்த மதத்திற்கு விரோதமான கருத்துக்களை வெளியிட்டுள்ள விக்னேஸ்வரனுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஞானசார தேரர் கோரிக்கை வைத்துள்ளார்.