வடக்கு முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப் பெறப்பட்டது

வட மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மாகாண சபை உறுப்பினர்களால் உத்தியோகபூர்வமாக ஆளுநரிடம் இருந்து மீளப்பெறப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் அஸ்மின் அயூப் ஆகியோர் நேற்று புதன்கிழமை (21) வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் இருந்து மனு ஒன்றினை கையளித்ததன் ஊடாக நம்பிக்கை இல்லா பிரேரணையினை மீளப்பெற்றுக்கொண்டனர்.

மாகாண சபை அமைச்சர்கள், மீதான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களின் பிரகாரம், இரு அமைச்சர்கள் பதவியை இராஜனாமா செய்ய வேண்டுமென்றும் இரு அமைச்சர்கள் கட்டாய விடுவிப்பில் இருக்க வேண்டுமென்றும் கடந்த சபை அமர்வின் போது முதலமைச்சர் பணித்திருந்தார்.

இதனையடுத்து, அன்றைய தினம் இரவே இலங்கை தமிழரசு கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர்கள் 15 பேர் கையொப்பமிட்டு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை வடமாகாண ஆளுநரிடம் சம்ர்ப்பித்திருந்தனர்.

இதனை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், வடக்கில் பூரண ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது.

அத்துடன் இந்த விடயம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் தொலைபேசி மற்றும் கடிதங்கள் மூலம் சமரச பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதோடு, மத தலைவர்களின் தலையீட்டினால் குறித்த நம்பிக்கை இல்லா பிரேரணை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்தநிலையில் தற்போது நம்பிக்கையில்லா பிரேரணை மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts