வடக்கு மாகாணத்தில் நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியின்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சரின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானதே எனவும் இதற்கு வடக்குக் கிழக்கிலுள்ள அனைத்துத் தமிழ் மக்களும் மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களும் எந்தவித வேறுபாடுகளும் காட்டாது பூரண ஆதரவை வழங்கவேண்டுமெனவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இ.தொ.கா.கட்சியின் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கு மாகாணத்தில் படைமுகாம்கள் உள்ளதால் மக்கள் வாழ்விடங்கள் அனைத்தும் தற்போதும் யுத்த பூமியாகவே காட்சியளிக்கின்றது. இவற்றை அகற்றுமாறு கோருவது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையெனவும், அதையே வடக்கு மாகாண முதலமைச்சரும் கோரியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழின அடையாளத்தைக் காக்கவேண்டுமெனக் கோரியும், தமிழ் மக்களின் உரிமைகளையும், கரிசனைகளையும், கவலைகளையும் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் உலகறியச் செய்யும் நோக்கிலேயே எழுக தமிழ் பேரணி நடாத்தப்பட்டது. இதனை பெரும்பான்மையின பேரினவாதிகள் இனவாதக் கண்ணோட்டத்தில் நோக்கி, தவறான கருத்துக்களைப் பரப்பி வருவது பிழையான விடயமெனவும் தெரிவித்துள்ளார்.