வடக்கு முதல்வரின் சொற்படி செயற்படுங்கள்: அங்கஜன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டதைப் போன்று, கட்சிகளை பார்க்காமல் நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கோரியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

வரலாற்றில் முதல்தடவையாக யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களில் இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடுகின்றது. அந்தவகையில் இதுவே தமக்கு கிடைத்த பாரிய வெற்றியென அங்கஜன் குறிப்பிட்டுள்ளார்.

இத்தேர்தலில் தமது உறுப்பினர்கள் வெற்றிபெறும் பட்சத்தில், ஸ்ரீமாவோ காலத்தில் விவசாய புரட்சியின் மூலம் யாழ்.மாவட்டம் அபிவிருத்தி செய்யப்பட்டதைப் போன்று, அல்பிரட் துரையப்பா போன்ற புரட்சித் தலைவர்கள் யாழ். மாநகர சபையை அபிவிருத்தி செய்ததைப் போன்று யாழ்ப்பாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்து அடுத்த தலைமுறைக்கு கொடுக்கத் தயார் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், உணர்ச்சிவசப்பட்டு அரசியல்வாதிகள் பேசும் பேச்சை நம்பி மக்கள் ஏமாறாமல், வடக்கு முதல்வர் குறிப்பிட்டதைப் போன்று நல்ல மனிதர்களுக்கு வாக்களிக்குமாறு அங்கஜன் ராமநாதன் கேட்டுக்கொண்டார்.

Related Posts