வடக்கு மாகாண முதலமைச்சரின் வசம் இருந்த சில அமைச்சின் கடமைகள், மேலதிக பொறுப்பக்கள் ஏனைய அமைச்சர்கள் மூவரிடம் மிக இரகசியமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
நேற்று புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அமைச்சுக்களின் பொறுப்புக்களை குறித்த மூன்று அமைச்சர்களும் பொறுப்போற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. முதலமைச்சரின் வசம் இருந்து, கூட்டுறவுதுறை, நீர் வழங்கல் – வடிகாலமைப்பு துறை, வீதி அபிவிருத்தி அதிகாரம், மகளிர் விவகாரம், சமூக சேவைகள் அமைச்சு அதிகாரம் ஆகிய 7 துறைகளுமே இவ்வாறு பகிரப்பட்டுள்ளன.
இதன்படி, சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கத்துக்கு தற்போதைய சுகாதார அமைச்சு கடமைகளுடன் மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சும், விவசாய அமைச்சர் பொ. ஜங்கரநேசனிடம் கூட்டுறவுத்துறை மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சும், மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனிடம் வீதி அபிவிருத்தி அமைச்சு பொறுப்புக்களும் கையளிக்கப்பட்டுள்ளன.
வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இடம் பெறும் நிகழ்வுகளில் ஊடகவியலாளகள் அழைக்கப்படுவது வழமையாகும். ஆனால் நேற்று வழமைக்கு மாறாக வட மாகாண ஆளுநரின் ஆலுவலகத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை அமைச்சர்கள் சென்று தமது பதவிப் பிரமாணம் மேற்கொண்ட நிகழ்வுக்கு ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.