வடக்கு மாகாண முதல்வர், ஏனைய உறுப்பினர்கள் புறக்கணிப்பு துரதிஸ்டவசமானது

இன்றைய மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டமானது நல்ல நோக்கங்களை முன்வைத்து நடாத்தப்படுகின்ற போதும் தவறான புரிதல்கள் மாறுபட்ட உள்நோக்கங்கள் காரணமாக இதில் ஏனைய தரப்பினரும் கலந்து கொள்ளாமை துரதிஷ்டவசமானது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும், யாழ்.கிளிநொச்சி மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

dak-thevananthaaa

நேற்றுகாலை யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் பல காரணங்களை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற இயலாத நிலை ஏற்பட்டிருந்தது. இம்மாதம் பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதங்கள் ஒருமாத காலமாக தொடர்ந்து நடக்கவிருக்கும் நிலையில் அதற்கு முன்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடாத்த அதன் வழமையான ஒழுங்கு முறைகளுக்கு ஏற்ப ஏற்பாடு செய்யும்படி குழுவின் செயலாளரான மாவட்ட செயலாளருக்கு அறிவித்திருந்தேன்.

இதனை தவறான புரிதல்களுக்கு உள்ளாக்கியதால் வடக்கு மாகாண முதல்வர், ஏனைய உறுப்பினர்கள், நகர, பிரதேச சபைகளின் பல உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.

அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு பல வாக்குறுதிகளை அவர்கள் வழங்கியிருந்தார்கள். அதைப்பற்றி கலந்துரையாடி அதனது நடைமுறைகள் தொடர்பில் ஆராய இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக இருந்தது. இருப்பினும் அவர்கள் கலந்து கொள்ளாதது துரதிஸ்டவசமானதாகும்.

மாகாணசபை முறைமையை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் எமக்கு உண்டு. இதனை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். மக்கள் நலன்சார்ந்து மாகாண முதல்வர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் நிச்சயம் ஒத்துழைப்பு வழங்குவோம்.

பொதுநலவாய நாடுகளின் மகாநாடு மிகவும் சிறப்பாக எதிர்ப்பார்த்ததை விட சிறப்பாக நடைபெற்றது. இது அரசுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

இந்தியப் பிரதமரும் இம் மாநாட்டில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒருநிலை ஏற்பட்டிருந்தால் நிச்சயமாக எமது மக்களுக்கு பல உதவிகளை அறிவித்திருப்பார் புனர்வாழ்வு திட்டங்களை அறிவித்திருப்பார்.

எமது கடற்றொழிலளர்களது பிரச்சினைகள் பற்றி கதைத்திருக்கலாம். 13 வது திருத்தத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடி இருக்கலாம் எனவே அவர் வராததும் எமது மக்களுக்கு துரதிஷ்டவசமானதாகவே அமைந்து விட்டது.

Related Posts