பதினெட்டு வகையான தொழில் முறைகள் தடை செய்யப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரும் யாழ். மாவட்டக் கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளரும் தெரிவிக்கின்றனர். ஆனால் எந்த வகையான தொழில்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை அவர்கள் கூற மறுத்து வருகின்றனர்.- இவ்வாறு தெரிவித்துள்ளனர் வல்வெட்டித்துறை கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினர்.
வல்வெட்டித்துறை கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினால் நேற்று நண்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நடத்தப்பட்டது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டு தமது பிரச்சினைகளை முன்வைத்தனர். அவர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
இழுவலைத் தொழிலை நிறுத்தும்படி எமக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். ஆனாலும் இழுவைப் படகுளினால் மீன் வளம் அழிவது என்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
நாம் இயந்திரங்களின் உதவியுடன் இழுவைப் படகுத் தொழிலை செய்யவில்லை. குறிப்பாக எமது படகுகள் பழமையானவையாகவே உள்ளன. கைகளினால் இழுத்தே இந்தத் தொழிலை நாம் கொண்டு வருகின்றோம்.
குறிப்பிட்ட மீன் வகைகளை குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே பிடிக்க முடியும். இல்லையென்றால் அவை அழிந்து போகும், அல்லது வேறு இடங்களுக்கு சென்று விடும். வடமராட்சியில் இழுவைப் படகுத் தொழிலில் 23 படகுகள் ஈடுபட்டு வருகின்றன.
சுமார் இருநூற்றி ஐம்பது தொழிலாளர்கள் படகுகளில் தொழில் புரிகின்றார்கள். திடீரெனத் தொழிலை நிறுத்தும்படி கூறினால் இவர்களது குடும்பங்களும் நடுத்தெருவுக்கு வரும். அதனை கருத்தில் கொண்டேனும் மாற்று நடவடிக்கைகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இன்று எமது தொழிலை செய்யவிடாது வடமாகாண மீன்பிடி அமைச்சர் தடை போடுவது கவலைக்குரியதாகும். இதற்கு எதிராக நாம் வட மாகாண சபை அமர்வு நாளை வியாழக்கிழமை கூடும்போது சபை முன்றலில்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.- என்றனர்.