வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை செய்திகள் தொடர்பில் யாழ்க்கோ நிறுவனம் விளக்கம்

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில்  ஊடகங்களில்  செய்திகள்  வெளிவந்திருந்தன. அச்செய்திகளில் யாழ்கோ நிறுவனம் தொடர்பிலும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தும் நோக்கில் யாழ்க்கோ நிறுவனம் சார்பில் அதன் தலைவர்  இ.சர்வேஸ்வராவினால் விளக்க அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கை வருமாறு..

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீது நடாத்தப்பட்ட விசாரணையில் வடக்கின் விவசாய கால்நடை கூட்டுறவு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் திரு.பொ.ஐங்கரநேசன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் யாழ்க்கோ நிறுவன பணிப்பாளர்கள் நியமனத்தில் தலையீடு செய்தமை ஒரு குற்றமாக காணப்பட்டுள்ளது. இந் நிலையில் அந் நிறுவனத்தின் தலைவர் எனும் அடிப்படையிலும் அக் குற்றச்சாட்டு எனது நியமனம் தொடர்பிலானது எனும் அடிப்படையிலும் குறித்த விசாரணைக்கு சமூகம் அளித்திருந்தவன் எனும் அடிப்படையிலும் எனக்குள்ள சமூகக் கடப்பாட்டை கருத்தில் கொண்டு சில விளக்கங்களை முன்வைக்க வேண்டியது அவசியமானது.

யாழ்க்கோ நிறுவனம் பற்றிய பின்னணி

யாழ்க்கோ எனும் வர்த்தக நாமத்தால் அறியப்பம் யாழ்.மாவட்ட அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் 1963 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டு பின் . 1976ம் ஆண்டு தொடக்கம் யாழ் மாவட்ட அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் எனும் பெயரில் இயங்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் பல்வேறு விடயங்களில் தனது கவனத்தைச் செலுத்தியபோதும் தனிநோக்குச் சங்கம் எனும் அடிப்படையில் பால் உற்பத்தி தொடர்பில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகின்றது. இதனாலேயே சாதாரண மக்கள் மத்தியில் பால்சங்கம் என பெயர் பெற்றதும் சங்க தலமையகம் அமைந்துள்ள கலாசாலை வீதி திருநெல்வேலி கிழக்குப் பிரதேசம் ‘பால் பண்ணையடி’ காரணப் பெயர் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களாக 5000 ஐ அண்மித்த தொகையினர் உள்ள போதும் 1000 ஐ அண்மித்த எண்ணிக்கையானோரே இயங்கு நிலையில் உள்ளனர்.

இச் சங்கத்தின் உப விதிகளின் பிரகாரம் சங்கத்தை நிர்வகிப்பதற்காக ஒன்பது பேர் கொண்ட பணிப்பாளர் சபையொன்று அமைக்கப்படும். இச் சபையில் ஆறு பேர் சங்கத்தின் அங்கத்தவர்கள் மத்தியில் இருந்து தெரிவு செய்யப்படுவதுடன் மூவர் துறைசார் அனுபவம் எனும் அடிப்படையில்; கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரால் நியமனம் செய்யப்படுவார். அவர்களுள் இருவர் மாவட்ட அரச அதிபரின் பரிந்துரையிலும் ஒருவர் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளரின் சிபாரிசின் அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவர்.

சில விசேட நிலமைகள் ஏற்படும் இடத்து (ஒழுக்காற்று விசாரணைகள், மோசடிகள் ஊழல்கள் நடைபெறுவதாக கருதும் இடத்து)  கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நேரடியாக அல்லது உதவி ஆணையாளருக்கு அதிகார கையளிப்பு செய்வதன் மூலமாக மேலதிகமாக இருவரை நியமனம் செய்யவும் கூட்டுறவுச் சட்டங்களின் அடிப்படையில் இடமுண்டு.

யாழ்க்கோவில் எனது நியமனத்தின் பின்னணி

யாழ்க்கோவின் வரலாற்றில் அதன் தலைவர்களாக நிர்வாகத் திறன் மிக்க அரச அதிகாரிகளே நியமிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இருந்தும் எனக்கு முன்பாக பதவியில் இருந்தவர் எந்த விதமான நிர்வாக அனுபவமும் அற்றவராக அப்போது அரசில் அமைச்சராகிவிருந்த ஒரு அரசியல் தலைவரின் பிண்ணணியில் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் குறித்த அமைச்சரின் செல்வாக்கை பாவித்து நிறுவனத்தை தவறாக வழி நடத்தியதாகவும் பணியாளர்கள் சிலரை மோசமாக பழிவாங்கியதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அவற்றுள் முக்கியமானதாக குறித்த சங்கத்தின் பொதுமுகாமையாளராக கடமையாற்றிய நேர்மையான ஒருவர் சங்கத்துக்கு நேரடியாக விஐயம் செய்த குறித்த அமைச்சரினால், தலைவருடன் ஒத்துழைக்க மறுக்கின்றார் எனும் அடிப்படையில் பலர் முன்னிலையில் தாக்கப்பட்டதாகவும் அதனால் மனமுடைந்து பதவி விலகியதாகவும் கதைகள் உண்டு.

குறித்த பொதுமுகாமையாளர் பதவி விலகிய போதும் பின்னர் சங்கத்தின் அங்கத்தவர் எனும் அடிப்படையில் அங்கத்தவர்களால் வாக்களிக்கப்பட்டு பணிப்பாளர் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டபோதும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பல காரணங்களை முன்வைத்து அவரை பணிப்பாளர் சபையில் இருந்து நீக்கியிருந்தார். இதற்குப் பின்னாலும் அரசியல் அழுத்தங்கள் இருந்துள்ளன.

இத்தகைய பிண்ணயில், 2014 ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி நான் யாழ்க்கோவின் தலைவர் பதவிக்கு அப்போதைய கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திரு. அருந்தவநாதன் அவர்களால் நியமிக்கப்பட்டேன். என்னுடன் இணைந்து கூட்டுறவுத் துறையில் நீண்ட அனுபவம் மிக்க திரு.ஆ.மகாதேவன் அவர்களும் நியமிக்கப்பட்டார். (நியமனக் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது)

அப்போது நிர்வாகத்தில் இருந்த தலைவர் திரு.பி.ஆர்.இரஞ்சன்  அவர்கள் தலமையிலான பணிப்பாளர் சபை மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்தான விசாரணையை நடாத்தும் நோக்கிலேயே விசேட ஏற்பாடுகளின் அடிப்படையில் நாம் நியமிக்கப்பட்டோம்.

கால்நடை உற்பத்தியாளர்களினால் கால்நடை துறை அமைச்சராகவிருந்த ஐங்கரநேசனுக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சராகவிருந்த முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் இவ் விசாரணைகளை நடாத்தும் படி கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திருமதி மதுமதி வசந்தகுமார் அவர்களுக்கு பணித்திருந்தார்.

குறித்த விசாரணைகள் நிறைவுபெறும் வரையிலுமே தற்காலிக ஏற்பாடாக குறித்த சங்கத்தின் தலமைப் பதவியை ஏற்றுக்கொள்ளும் படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டேன். குறித்த நிறுவனத்துக்கு அருகாமையில் எனது வேலைத்தளம் அமைந்துள்ளமையும் அடிப்படையில் ஒரு உயிரியல் விஞ்ஞானப்பட்டதாரி எனும் கல்வித் தகமையும் இலங்கை நிர்வாக சேவைக்கு (SLAS) நியமனம் செய்யப்பட்டவர் என்பதுடன்   பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் எனும் தகமையும் இப் பதவிக்கு நான் சிபாரிசு செய்யப்பட பிரதான காரணங்களாக அமைந்தன.

தற்காலிக ஏற்பாடாக மூன்று மாத காலத்துக்கு மட்டும் இப் பதவியை ஏற்றுக்கொள்ளும் உடன்பாட்டோடு அதற்கு சம்மதம் தெரிவித்தேன். அதன்படியே எனக்கு மூன்று மாதகால நியமனம் 01.05.2014 தொடக்கம் 31.08.2014 வரை வழங்கப்பட்டது. பல்கலைக்கழக நிரந்தரப் பணியில் இருந்தமையால் இவ் நியமனத்தை ஏற்றுக்கொள்வதற்கு பதிவாளருக்கு விண்ணப்பித்து அவரது அனுமதியையும் பெற்றுக்கொண்டேன்.

நான் சங்கத்துக்கு பொறுப்பேற்க சென்றிருந்த போது குறித்த பணிப்பாளர் சபைக்கு அங்கத்தவர்கள் மத்தியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆறு பேரும் அழைக்கப்படாத நிலையில் நியமனம் செய்யப்பட்ட மூவருமே சங்கத்தை வழிநடாத்தி வந்தமையை அவதானித்தேன். உடனடியாகவே கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளருடன் தொடர்புகொண்டு அவரது அனுமதியுடன் அங்கத்தவர் பிரதிநிதிகள் ஆறு பேரையும் பணிப்பாளர் சபை பொறுப்புக்களை ஏற்க அழைத்தேன்.

அதன் படி 11 பேர் கொண்ட பணிப்பாளர் சபையின் தலைவராக பொறுப்பேற்று சங்கத்தை வழிநடாத்த தொடங்கினேன். உப தலைவராக அங்கத்தவர்கள் சார்பில் தெரிவு செய்யப்பட்ட திரு.சி.மகாலிங்கம் நியமிக்கப்பட்டார்.  சமாந்தரமாக கூட்டுறவு அபிவிருத்தித்  திணைக்களமும் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தது. திரு.ரஞ்சன் அவர்களுடனும் அவரின் கீழ் பணியாற்றிய நியமன உறுப்பினர்கள் மற்றும் பொதுச்சபை பிரதிநிதிகளுடனும் எதுவித முரண்பாடுகளும் இன்றி எனது தலமைத்துவத்தை வழங்கினேன். அவர்களுள் அனேகமானோர் தமது ஒத்துழைப்பை வழங்கினர்.

 

தலமைப் பொறுப்பை ஏற்று ஒரு வார காலப்பகுதிக்குள் எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த உற்பத்தியாளர் ஒருவர் சங்கத்தின் இருபாலைக்கிளையில் பால் கொள்வனவில் மோசடி நடப்பதாகவும் அப்பாவி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் அது தொடர்பில் என்னை கவனம் செலுத்தும்படியும் கேட்டுக்கொண்டார். உடனடியாக அவ் விடயத்தை ஆராய்ந்த போது குறித்த கிளைக்கு தொழிலாளி தரத்தில் இருந்தவர் முகாமையாளராக கூட்டுறவு விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டிருந்ததுடன் பால் கொள்வனவிலும் மோசடியில் ஈடுபட்டிருந்தார். உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்வனவு செய்யும் போது பாலின் சரியான அளவை அவர்களது பதிவேட்டில் பதிந்திருந்த போதும் தலமையகத்துக்கு கொடுப்பனவுக்காக அனுப்பப்படும் படிவத்தில் குறைத்து பதிந்து அனுப்பியுமிருந்தார். இதன் மூலம் குறைத்து பதியப்பட்டிருந்த பாலுக்கான கொடுப்பனவு உற்பத்தியாளனுக்கு கிடைக்கவில்லை. அப்போது ஒரு லீற்றர் பாலுக்கு 57 ரூபா வழங்கப்பட்டது. இவ்வாறு திருடப்பட்ட பாலை குறித்த முகாமையாளர் தனிப்பட்ட ரீதியில் விற்பனை செய்து வந்தார். அப்போது ஒரு லீற்றர்  பாலின் விற்பனை விலை 70 ரூபாவாகவிருந்தது.

எனது பணிப்பின் பேரில் 2014 ஐனவரி தொடக்கம் 2014 மேவரையான காலப்பகுதியை ஆராய்ந்த போது 5000 லீற்றருக்கு மேலான பால் மோசடி செய்யப்பட்டிருந்தது. இம் மோசடி அப்போதைய தலைவரால் கண்டறியப்படவும் இல்லை தடுக்கப்படவும் இல்லை. மாறாக கிளைகளை மேற்பார்வை செய்யும் கிளைமேற்பார்வையாளர் சுயமாக செயற்படும் நிலமை தலைவரால் தடுக்கப்பட்டு தலைவர் பணிக்கும் கிளைகளுக்கு மட்டுமே அனுப்பப்பட்டார். சிரேஸ்ட முகாமையாளர்கள் பணியாற்றிய பல கிளைகளுக்கு மாதத்துக்கு மூன்று தடவைகளுக்கு மேல் அனுப்பப்பட்டவர் குறித்த மோசடி நடைபெற்ற கிளைக்கு அனுப்பப்படவில்லை. நிலமையின் தீவிரத்தை உணர்ந்து  கொண்டு பின்வரும் நடவடிக்கைகளை எடுத்தேன்.

  1. குறித்த சம்பவம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு.சு.கணேசமூர்த்தி அவர்களை நியமித்தேன்.
  2. பால் கொள்வனவு விபரங்களை கணணி மயப்படுத்த மென்பொருள் ஒன்று வடிவமைக்கப்பட்டது.
  3. பால் மோசடியில் முகாமையாளர்கள் ஈடுபட்டால் மோசடி செய்த பாலுக்கான கொள்வனவுப் பெறுமதியை உற்பத்தியாளனுக்கு செலுத்துவதுடன் குறித்த பெறுமதியின் 50 சதவீதத்தை தண்டப்பணமாக சங்கத்துக்கு செலுத்த வேண்டும் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது இன்று வரையில் நடைமுறையில் உள்ளது.

குறித்த விசாரணையின் மூலம் பல உண்மைகள் வெளிவந்தன. இவ் விசாரணையின் அடுத்த கட்டமாக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் மேலதிக விபரங்களை குறிப்பிட முடியாதுள்ளது.

ஆனால் துர்அதிஸ்டவசமாக கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மேற்கொண்ட முன்னாள் தலைவருக்கான விசாரணையில் இவ் மோசடி கருத்தில் எடுக்கப்படவில்லை. அவர்கள் ஏற்கனவே தமக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே விசாரணைகளை மேற்கொண்டார்கள்.

இவ் விசாரணை கூட்டுறவுத்துறையில் 46(2) என அறியப்படும் பிரதானமானதொரு விசாரணையாகும். இவ் விசாரணை நிறைவுறுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட காலப்பகுதியிலும் அதிகமான காலப்பகுதி எடுத்திருந்தது. விசாரணைக்கான காலம் நீடிக்க நீடிக்க எனது பதவியும் சமாந்தரமாக நீடிக்கப்பட்டவண்ணமிருந்தது. இருந்தும் ஒருகட்டத்தில் அதிகரித்த வேலைச்சுமை காரணமாக பதவிவிலகும் கடிதத்தை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளருக்கு சமர்ப்பித்திருந்த போதும் இன்றுவரை அதற்கான பதில் கடிதம் கிடைக்கப்பெறவில்லை.

இதேவேளை திரு.ரஞ்சன் அவர்களின் நியமனக் காலம் முடிவடைந்தது. அவருடன் சேர்ந்து திரு.அருட்செல்வன் (சமுர்த்தி உத்தியோகத்தர்) அவர்களது காலமும் முடிவடைந்திருந்தது. பின்னர் ஒன்பது பேர் கொண்ட பணிப்பாளர் சபையே பொறுப்பாகவிருந்தது.

விசாரணையின் முடிவில் பல குற்றச்சாட்டுக்கள் மெய்பிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் முன்னாள் தலைவர் அவரது காலத்தில் இருந்த பணிப்பாளர் சபை உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. (தலைவரிடம் கேட்கப்பட்ட குற்றப்பத்திரம் இணைக்கப்பட்டுள்ளது)

விசாரணை அறிக்கை பொதுச் சபை முன்னிலையில் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு.பொ.மோகன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட போது அது பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந் நிலையில் குறித்த பணிப்பாளர் சபையில் அங்கத்துவம் பெற்றவர்களுக்கு கூட்டுறவு அமைப்புக்களின் நிர்வாகங்களில் பங்குபற்றுவதற்கு 5 வருடத் தடை விதிக்கப்பட்டது.

இதிலும் விசேடம் எதுவெனில் குறித்த விசாரணை வடக்கு கூட்டுறவு வரலாற்றிலேயே யாழ்க்கோவில் மட்டுமே முறைப்படி நிறைவேற்றி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஏனைய சில சங்கங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொதுச்சபையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி அறிக்கையை ஏற்றுக்கொள்ளாது தொடர்ந்தும் பதவிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே கூட்டுறவு அமைப்புக்களில் கல தசாப்தங்களாக தலைவர் பதவியில் தொடர்பவர்களும் உள்ளனர்.

குறித்த விசாரணைகளுக்கு காரணமாகவிருந்த சில பணியாளர்களும் தனிப்பட்ட ரீதியில் முன்னைய நிர்வாகத்தினால் பழிவாங்கப்பட்டிருந்தனர். அதிலும் குறிப்பாக கூட்டுறவு உயர்கல்வி கற்பதற்காக சேவைக்கால அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படவேண்டிய ஒருவர் புறக்கணிக்கப்பட்ட போது அவர் கூட்டுறவு அமைச்சருக்கு முறைப்பாடு செய்திருந்தார். அது தொடர்பில் அமைச்சர் வினவியிருந்த போதும் பணிப்பாளர் சபை தீர்மானத்துக்கு கட்டுப்பட்டு செயற்பட்டமை அரசியல் அழுத்தங்களுக்கு அப்பால் சங்கத்தை நான் வழி நடத்தியமைக்கு உதாரணமாக கூற முடியும்.

இவ்வாறாக 29.01.2017 வரை எனது தலைவர் பதவியை தொடரந்த நிலையில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பொதுச் சபை தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந் நிர்வாக சபைக்கு அரச அதிபரின் சிபாரிசின் அடிப்படையில் நானும் மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.சிறிரங்கன் அவர்களும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் சிபாரிசின் அடிப்படையில் கால்நடை வைத்தியஅதிகாரி திரு.மகாதேவனும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளோம்.

புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நிர்வாக சபை தலைவராக மீளவும் என்னையே தெரிவுசெய்துள்ளது. வேறொருவரை தெரிவு செய்ய வாய்பிருந்தும் என் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக அங்கத்தவர்கள் இந்த முடிவை எடுத்திருந்தனர்.

 

எமது நிர்வாக காலத்தில் யாழ்க்கோவில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள்.

நிதிநிலமை மேம்படுத்தல் தொடர்பானது

  1. தற்போதைய மாகாண சபையின் அவைத் தலைவர் கௌரவ சி.வி.கே சிவஞானம் அவர்கள் கூட்டுறவு கிராமிய வங்கிகளின் சமாசத் தலைவராக இருந்த போது பிரமுக வங்கியில் வைப்பிலிடப்பட்ட மில்லியன் கணக்கான கூட்டுறவுச் சங்கங்களின் நிதியில் எமது சங்கத்தின் நிதிப் பெறுமதி வட்டியுடன் 31.12.2015ல் மீதி 10 மில்லியனுக்கு மேல் ஆகும். குறித்த வங்கி மத்திய வங்கியினால் சுவீகரிக்கப்பட்டமையால் அந் நிதி இன்று வரை கூட்டுறவு அமைப்புக்களுக்கு வழங்கப்படவில்லை. இருந்தும் நாம் எமது முயற்சியினால் எமது சங்க நிதியின் குறித்த பகுதியை ரூபா3,921,333.84 சதம் பெற்று அதனை மக்கள் வங்கியில் நிலையான வைப்பில் இட்டுள்ளோம். இது எமது நிர்வாகத்தின் மிகமுக்கியமான வெற்றியாகும்.

உற்பத்தியாளர்கள் சார்பான திட்டங்கள்

  1. முன்னைய நிர்வாகத்தின் கீழ் நடைபெற்ற பெருமளவிலான பால் கொள்வனவு மோசடியை கண்டறிந்து அது தொடர்பில் விசாரணைகள் நடாத்தியது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இவ்வாறான நிலமை ஏற்பட்டு அப்பாவி பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பால்கொள்வனவு கணணிமயப்படுத்தபட்டு அதற்கான மென்பொருளும் வடிவமைக்கப்பட்டது. அதன்வழி மாதாந்தம் கணணி மூலமான சிட்டை ஒவ்வொரு பால் உற்பத்தியாளருக்கும் வழங்கப்படுகின்றது.
  2. நேரடியாக வழங்கப்பட்ட கொடுப்பனவு முறைகள் நிறுத்தப்பட்டு வங்கிகள் மூலமாக பால் உற்பத்தியாளர்களின் கொடுப்பனவு வழங்கப்படுவதனால் மோசடிகள் ஏற்படும் வாய்ப்பு தடுக்கப்பட்டதுடன் வங்கிக் கடன்களை உற்பத்தியாளர்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
  3. 12 வீதமாக இருந்த UNDP சுழற்சி கடனுக்கான வட்டி வீதம் 8 வீதமாக ஆகக் குறைக்கப்பட்டதுடன் மாதாந்த தவணைகளின் எண்ணிக்கை 20 இருந்து 15 ஆக குறைக்கப்பட்டுள்ளது..
  4. அங்கத்தவர் ஒருவர் இறக்கும் போது திருப்பிச் செலுத்த தேவையற்ற விதத்தில் 5000.00 ரூபா வழங்கப்படுவதுடன் அங்கத்தவரின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் மரணத்தின் போது வட்டியற்ற 10 தவணைகளில் மீளச் செலுத்தத்தக்க கடனாக 10000.00 ரூபா வழங்கப்படுகின்றது.
  5. 500 பேர் வரையில் புதிய அங்கத்தவர்களாக 2014 மே மாதத்துக்குப் பின்னர் இணைக்கப்பட்டுள்ளனர்.
  6. பால் கொள்வனவில் குறைவு ஏற்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப்பெறின் படிவங்கள் ஆராயப்பட்டு ஏற்படும் குறைவுக்கான தொகை முகாமையாளரிடமிருந்து அறவிடப்பட்டு உற்பத்தியாளருக்கு வழங்கப்படுவதுடன் முகாமையாளருக்கு 50 வீதம் தண்டப் பணமும் அறவிடப்படுகின்றது.
  7. கால்நடைத்தீவனத்தில் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று புதிய வகை கால்நடைத் தீவனங்களும் கடனுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
  8. யுணழடடய எனப்படும் குறைநிரப்பி கால்நடைத்தீவனம் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று வரை வெற்றிகரமாக எமது பண்ணையாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்றது.
  9. பாலின் கொள்வனவு விலை 57 ரூபாவிலிருந்து 67 ரூபாவுக்கு அதிகரிக்கப்பட்டது. விற்பனை விலையை அதிகரிக்காமல் கொள்வனவு விலையை உற்பத்தியாளர் நன்மை கருதி அதிகரித்து சிறிதளவு நட்டத்தையும் ஓரிரு மாதங்கள் எதிர்கொண்டதுமுண்டு. தற்போது மேலும் பாலின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  10. எமது நிர்வாகம் 2014 மே மாதம் பொறுப்பேற்ற போது இருந்த மே மாதப் பால் கொள்வனவு 125881.50 லீற்றர்கள். தற்போதைய பால் கொள்வனவு 173042.50லீற்றர்கள்.
  11. வருடாந்த கூட்டுறவு தின விழாவில் எமது அங்கத்தவர்கள் கௌரவம் பெற்றுள்ளனர்.
  12. முன்பள்ளிப் பால்விநியோகம் மற்றும் தொண்டர் நிறுவனங்களுக்கு பால் விநியோகம் இலாப நோக்கம் கருதாது மேற்கொண்டமை.

பணியாளர்கள் தொடர்பான அடைவுகள்

  1. எமது நிர்வாகத்தின் கீழ் தற்காலிகமாக இருந்த 25 பணியாளர்கள் நிரந்தர நியமனத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
  2. 10 பணியாளர்கள் பதவி உயர்வுகளைப் பெற்றுள்ளனர்.
  3. பணியாளர்களுக்கு மாதாந்தம் வழங்கப்பட்ட வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு பல கூட்டுறவாளர்கள் சேர்ந்தும் எமது அழுத்தங்களும்; ஒரு காரணமாகக் கொண்டும் மேற்கொண்ட நடவடிக்கையினாலேயே 7800.00 ரூபாவுக்கு அதிகரிக்க கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு சுற்றுநிருபம் விடுத்திருந்தது. இதனால் அனைத்து கூட்டுறவுத்துறை பணியாளர்களும் நன்மைபெற்றனர். இது எமக்குப் பெருமைக்குரியது. இன்று வரை யாழ்க்கோ இத் தொகையை மாதாந்தம் பணியாளர்களுக்கு வழங்கிவருகின்றது. இதற்காக நாம் செலவிடும் தொகை கிட்டத்தட்ட 475000.00 இற்கு மேலாகும். அதற்கேற்ப நாம் இலாபத்தில் சங்கத்தை நடாத்துகின்றோம்.
  4. பல பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவந்ததுடன் அவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட பணியாளர் ஒருவரின் விசாரணை முடிவுறுத்தப்பட்டு அவர் கூட்டுறவு பணியாளர் தராதரப்பத்திரம் பயிற்சி நெறி(உயர்தரம்) கற்கை விடுப்பில் அனுப்பப்பட்டார்.
  5. கூட்டுறவுப் பணியாளர் தராதரப்பத்திர பயிற்சிநெறி(உயர்தரம்) கற்கை நெறிக்கு நீண்ட காலமாக பணியாளர்கள் எவரும் விடுவிக்கப்படாத நிலையில் எமது நிர்வாகம் வருடம் ஒருவர் எனும் அடிப்படையில் விடுவிக்க மேற்கொண்ட நடவடிக்கையினால் ஏற்கனவே ஒருவர் கற்கையை பூர்த்தி செய்துள்ளதுடன் இவ் வருடம் இன்னொரு பணியாளர் கற்கைக்காக விடுவிக்கப்பட்டுள்ளார்.
  6. இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல பணியாளர்களின் வருடாந்த வேதன ஏற்றம் எமது நிர்வாகத்தால் சட்ட முறைமைகளுக்கு அமைய வழங்கப்பட்டது.
  7. நீண்ட காலமாக இடமாற்றங்கள் இன்றி அவதிப்பட்ட கிளைமுகாமையாளர்களின் இடமாற்றம் தொடர்பில் ஒரு பொதுக்கொள்கையை பின்பற்றி சுழற்சிமுறையில் ஆறுமாதத்துக்கு ஒரு தடவை இடமாற்றம் வழங்க நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகாமையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது ஆறுமாத காலம் ஒரு வருடமாக நீடிக்கப்பட்டுள்ளது. இடமாற்றக் கொள்கை சில முகாமையாளர்களுக்கு கசப்பாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
  8. வெற்றிடமாகவிருந்த பதவிகளை நிரப்புவதற்காக உள்வாரி வெளிவாரி விண்ணப்பங்கள் கோரப்பட்டு பல பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன.
  9. புதிய அலுவலகத் தொகுதி அமைக்கப்பட்டதுடன் பணியாளர்கள் கணணி மூலமாக தமது வேலைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கை

  1. யாழ்க்கோவின் உற்பத்திப் பகுதியை மேம்படுத்துவதற்காக எமது நிர்வாகத்தால் யூஸ் உற்பத்திக்கென தனித்துவமான குளிருட்டி அறை (Blast Freezer) நிறுவப்பட்டதுடன் கணிசமானளவு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
  2. பால் உற்பத்தி தொடர்புடைய நிறுவனம் எனும் ரீதியில் அவசியம் இருக்க வேண்டிய ஆனால் இல்லாமலிருந்த குளிரூட்டி வாகனம் (Cooler Vehicle)எமது முயற்சியினாலேயே கொள்வனவு செய்யப்பட்டது. அதன் மொத்தப் பெறுமதி 2 மில்லியன் 0.6 மில்லியன் UNDP நிறுவன திட்டத்தில் இருந்து பெறப்பட்டது.
  3. உற்பத்திப் பகுதியில் அவசியமான திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் உற்பத்தி முகாமையாளர் பதவிக்கும் தகுதியான பலர் ஒப்பந்த அடிப்படைகளில் நியமிக்கப்பட்டனர். இருந்தும் கூட்டுறவுத் துறையில் இருக்கும் சம்பள முரண்பாடுகள் தேவையற்ற நெருக்கடிகளினால் திறமை வாய்ந்த பலரை தொடர்ந்து தக்க வைக்க முடியவில்லை.
  4. எமது பொருட்களுக்கு இலங்கை அரசின் தர நிர்ணயத்தை SLS-GMP பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதற்காக இலங்கை கட்டளைகள் நிறுவன அதிகாரிகள் தமது முதல் கட்ட சோதனைகளையும் நிறைவேற்றியுள்ளனர். விரைவில் தரநிர்ணயம் பெற்றுக்கொள்ளப்படும்.
  5. புதிய பால் பதனிடும் தொழிற்சாலையை நிறுவ திட்ட முன்மொழிவுகள் அரச அதிபருக்கு கொடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  6. புதிய பதனிடும் தொழிற்சாலை நிறுவப்பட்டதும் வீட்டுக்கு வீடு பைகளில் அடைக்கப்பட்ட பாலினை விநியோகிக்கவுள்ளோம்.
  7. நெதர்லாந்தில் இருந்து வருகை தந்த விற்பன்னர் ஒருவரால் உற்பத்திப் பகுதி பணியாளர்களுக்கு 10 தினங்கள் முழுநாள் பயிற்சி வழங்கப்பட்டது.
  8. ருNனுP நிறுவன பங்களிப்புடன் புதிய பொதியிடும் இயந்திரம் பச்சை வெண்ணை பிரிகருவி என்பன கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
  9. பொருத்தமான துறைசார் வல்லுனர்களின் உறுதிப்படுத்தலுடனேயே வாகனம் மற்றும் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன.

 

விற்பனை மேம்படுத்தல் நடவடிக்கை

  1. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் முதல் முறையாக எமது உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் செய்யப்பட்டன.
  2. சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஒருவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு சந்தை வாய்ப்புக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. இருந்தும் முகாமைத்துவ பட்டதாரியான அவரை சம்பள இதர நெருக்கடிகளால் தொடர்ந்து தக்க வைக்க முடியவில்லை.
  3. சந்தைப்படுத்தல் முகாமையாளர் பதவிக்கு உள்வாரி வெளிவாரி விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதும் தகுதியான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறவில்லை. இதற்குக் காரணம் சம்பளக் குறைவேயாகும்.
  4. பல்கலைக்கழகம் சுகாதார அமைச்சு போன்ற நிறுவனங்களின் கூட்டங்களுக்கான சிற்றுண்டி விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதுடன் இது வேறு நிறுவனங்களுக்கும் விஸ்தரிக்கப்படுகின்றது. இருந்தும் மாகாண அரசின் பல நிறுவனங்கள் எம்மிடம் இது தொடர்பில் அணுகாமை கவலைக்குரியது.
  5. புதிய கிளைகள் உருவாக்கப்பட்டன. நட்டத்தில் இயங்கும் யாழ்.பஸ்நிலைய கிளையை உப ஒப்பந்தம் மூலமாக தனியாருக்கு வழங்கி விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டபோதும் கூட்டுறவுத் திணைக்கள விதிமுறைகளினால் அம் முயற்சி கைவிடப்பட்டது.
  6. அவ்வப்போது பல நிகழ்வுகளிலும் எமது காட்சிக்கூடம் காட்சிப்படுத்தப்பட்டவண்ணமுள்ளது.
  7. மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மூலம் ஏழு ஆழ்குளிரூட்டிகள் பெறப்பட்டு கிளைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  8. கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் பால் பரிசோதிக்கும் நவீன கருவிகள் 9 வழங்கப்பட்டுள்ளன.

 

அமைச்சருக்கு எதிரான விசாரணையும் அதன் பிண்ணணியும்

குறித்த விசாரணைக்கு சமூகமளிக்குமாறு விசாரணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண உதவிப் பிரதம செயலாளரினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அக் கடிதத்தில் முன்னைய தலைவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுப் பத்திரம்  அதற்கான பதில் அடங்கிய கோவைகள் 2014ம்  2015ம் ஆண்டு நிதிநிலமை தொடர்பான ஆவணங்கள் கணக்கறிக்கைகளை கொண்டு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த ஆவணங்களை கையளிப்பதற்கு அவர்கள் வழங்கிய இருநாள் அவகாசம் போதாமையால் கால அவகாசம் கோரப்பட்டு அனுமதிக்கப்பட்டது. அதன்படி குறித்த ஆவணங்கள் ஏறக்குறைய 15 க்கும் மேற்பட்ட கோப்புக்களை காவிய படி பொது நூலகத்தில் விசாரணைக்குழு முன்பாக சமூகமளித்திருந்தேன்.

விசாரணைக் குழுவினர் ஆவணங்களை பரீட்சிப்பதை விடுத்து எனது நியமனம் தொடர்பிலும் எனக்கும் அமைச்சர் ஐங்கரநேசனுக்குமான அறிமுகம் தொடர்பிலும் கேள்விகளை எழுப்பினர். அவர்களது கேள்விகளுக்கு உரிய பதிலை கொடுத்திருந்தேன். எனது அவதானிப்பின் அடிப்படையில் விசாரணைக்குழு முன்எடுக்கப்பட்ட ஒரு முடிவில் இருப்பதை உணர முடிந்திருந்தது.

எனது நியமனம் தொடர்பான ஆவணங்களை கேட்ட போது குறித்த கடிதத்தில் அவைபற்றி எதுவும் குறிப்பிடப்படாமையால் எடுத்து வரவில்லை எனத் தெரிவித்திருந்தேன். இந் நிலையில் அவற்றின் பிரதிகளை பின்னர் வடக்கு மாகாண உதவிப் பிரதம செயலாளரிடம் கையளித்திருந்தேன்.

ஆனால் குறித்த விசாரணைக்குழு இறுதி வரையிலும் தாங்கள் முன்னர் கோரிய முன்னாள் தலைவர் மீதான விசாரணையுடன் தொடர்புடைய எந்த ஆவணங்களையும் பரீட்சித்திருக்கவில்லை. இது ஏன் என்கின்ற மிகப் பெறுமதியான கேள்வி இன்று வரை என்னிடமுண்டு. அவர்கள் எனது நியமனத்தை கேள்விக்குட்படுத்துவதிலேயே குறியாகவிருந்தனர்.

இருந்தும் எழுத்துமூலமாக ஆவணங்களை சமர்பிக்க இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி எமது காலத்தில் நாம் மேற்கொண்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளருக்கு எழுதியிருந்த கடிதத்தின் பிரதியையும் சமர்ப்பித்திருந்தேன். அவை கருத்தில் எடுக்கப்பட்டதா என்பதை அறியேன்.

 

யாழ்க்கோ மூலமாக எனக்கு கிடைக்கும் நன்மைகளும் எனது அவதானிப்புக்களும்

யாழ்க்கோ தலைவராக இருப்பதற்கு மாதாந்தம் 2350.00 ரூபாவும் நெறியாளர்  கூட்டமொன்றுக்கான படியாக 400 ரூபாவும் உபசபை கூட்டங்களுக்காக 100 ரூபாவும் வழங்கப்படும். இந் நிலையில் இப் பதவியை ஏன் தொடர்கின்றீர்கள் என பலரும் என்னை கேட்பதுண்டு. அதைத் தாண்டி சிலர் குறித்த பதவியை தவறாகப் பயனபடுத்தி இரகசிய இலாபம் பார்ப்பதாகவும் குற்றம் சுமத்துவதுண்டு. அவர்கள் சில கூட்டுறவுச் சங்கங்களில் தலைவர்கள் நடந்து கொள்ளும் முறைமையின் அடிப்படையில் அக் குற்றச்சாட்டை சுமத்துகின்றார்கள். இரகசிய லாபம் பார்க்க மனம்கொண்டால் அதற்கான வாய்ப்புக்களும் நிறையவுண்டு என்பதும் மறுப்பதற்கில்லை. இதனைப் பலர் பயன்படுத்தியே கூட்டுறவு அமைப்புக்களை சுரண்டிக்கொள்கின்றார்கள். அதனாலேயே கூட்டுறவுக்குள் நுழைவதற்கும் எத்தனிக்கின்றார்கள். தமது இரகசிய லாபமீட்டலுக்கு ஒத்துழைக்காதவர்களை வெளியேற்றவும் முயல்கின்றார்கள். அதுவே எமக்கு கிடைக்கும் அழுத்தங்களும் அவப்பெயர்களும்.

யாழ்க்கோவின் சங்க நிதியில் ஓரு சதத்தையேனும் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தியிருப்பதையோ அல்லது வளங்களை எனது சொந்தத் தேவைக்காக பயன்படுத்தியிருப்பதையோ எவரேனும் நிரூபிக்கும் முடிந்தால் என் வாழ்நாள் தேட்டத்தையே நட்ட ஈடாக எழுதிக்கொடுக்க தயாராகவுள்ளேன்.

கோடிக்கணக்கான பெறுமதிமிக்க கூட்டுறவு அமைப்புக்களின் நிதிகளை கையாளும் கூட்டுறவுச் சங்க தலைவர்கள் எந்த விதமான பிணைக் கடப்பாடுகளையும் கொண்டிருப்பதில்லை. அவர்கள் கையாடும் நிதியை வசூலிக்கத்தக்க ஏற்பாடுகள் எதுவும் இல்லை. தம் வாழ்வை கூட்டுறவுக்காக அர்ப்பணித்த பெரியவர்கள் வீரசிங்கம் வி.பொன்னம்பலம் சி.சிவமகராஐா பண்டிதர் க.நாகலிங்கம் போன்ற பெருந்தகைகளின் காலத்துக்கு பொருத்தமாகவிருந்த சட்டங்களை திருத்த வேண்டும் எனும் முனைப்பை கொண்டுள்ளோம். அதன் வழி வடக்கு மாகாண கூட்டுறவு நியதிச் சட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் இன்னும் கிடப்பில் உள்ளது. இந்த முயற்சிகளை கூட்டுறவு அமைச்சர் எனும் அடிப்படையில் அமைச்சர் ஐங்கரநேசன் எடுத்திருந்த போதும் சட்ட மூலத்தை நிறைவேற்றுவது அவரது கரங்களில் இல்லை. இச் சட்ட மூலம் நிறைவேற்றப்படுமாகவிருந்த கூட்டுறவையே தமது முகவரியாக கொண்ட பல பிரகிருதிகளுக்கு ஆப்பு வைக்கப்படும். இதுவும் அமைச்சர் ஐங்கரநேசன் அரங்கில் இருந்து அகற்றப்படவேண்டும் என்பதற்கான பிரதான காரணமாகும்.

வயது முதிர்ந்தவர்களின் வாழ்விடங்களாக மாறியிருக்கும் கூட்டுறவுக்குள் இளைய இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். இதை இந்தச் சமூகம் உணராதவரையிலும் தகுதியானவர்களை அரங்கில் இருந்து அகற்றும் தகிடுதத்தித்தனங்கள் அரங்கேறியவண்ணமேயிருக்கும்.

குறிப்பு : எமது சங்கம் தொர்புடைய ஆவணங்களை பரீட்சிக்க விரும்புவோர் தகவல் அறியும் சட்டம் மூலம் அணுகமுடியும். எவ்வித ஒளிவுமறைவுமின்றி எந்த விடயத்துக்கும் பதில் அளிக்க தயாராகவுள்ளோம்.

இ.சர்வேஸ்வரா ,தலைவர்
யாழ்.மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் – யாழ்க்கோ.
இணைப்புக்கள்

  1. தற்போதய தலைவரின் நியமன கடிதம்
  2. யாழ்க்கோ நிறுவனத்திற்கான  விசாரணை அழைப்பு 
  3. முன்னாள் தலைவருக்கான குற்றப்பத்திரம்

Related Posts