வடக்கு மாகாண சபை குழப்பம்! அவைத்தலைவரை நெருங்கிய சிவாஜி!.

வடக்கு மாகாண ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சரினை விமர்சித்து பேசியதால் சபையில் ஆளுங்கட்சிக்குள்ளேயே பெரும் அமளி துமளி ஏற்பட்டது. நான், நீ, போ, பேயா எனவும் கருத்து மோதல்கள் இடம்பெற்றமையால் அவையே நேற்று கலவரமாகியது.இந்த மோதல்களின் தொடர்ச்சியாக உறுப்பினர் சிவாஜிலிங்கம் செங்கோலை தூக்க முயன்றமையால் பெரும் குழப்பம் ஏற்பட்டு ஒருமணித்தியாலம் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

வடக்கு மாகாண சபையின் 71 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. இதன் போது வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சும் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பாதீடு தொடர்பில் கருத்துக்களை முன்வைக்காமல், முதலமைச்சரினை அரசியல் ரீதியாக விமர்சித்தமையும், தரக்குறைவான வார்த்தை பிரயோகங்களுமே குழப்பத்திற்கு காரணமாக அமைந்தது. இந்த குழப்பங்கள் அனைத்துலும் எதிர்க்கட்சி சம்பந்தப்படவில்லை.

மாறாக ஆளுந்தரப்பு தமக்குள்ளே மோதுண்டுதனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சியினர் யார் என்று தெரியாத நிலைக்கு தலைகீழாக நேற்றைய சபை மாறியிருந்தது.

சண்டை ஆரம்பம்

முதலமைச்சு அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றிய அஸ்மின்,வடக்கு மாகாண முதலமைச்சரினை சுற்றி இருப்பவர்கள் அவரை தவறாக வழிநடத்துகின்றார்கள். இங்கு உரையாற்றிய கொள்கை விளக்கவுரை யாரோ எழுதி குடுத்ததனை தான் வாசிக்கின்றார். எனவே முதலமைச்சர் தான் முதலமைச்சராக இங்கு வந்த போது மக்களின் எதிர்பார்ப்புக்கள் எவ்வாறு இருந்தது என முதலமைச்சர் சிந்தித்து பார்க்க வேண்டும். தன்னை சுற்றி இருப்பவர்கள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அஸ்மின் கூறினார்.

இவ்வாறு அஸ்மின் உரையாற்றி கொண்டு இருக்கும் போது ஏனைய சில உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் போது எழுந்த உறுப்பினரான சர்வேஸ்வரன், முதலமைச்சரின் தனிப்பட்ட விடயங்களை பேசுவது ஏற்க முடியாது. அவ்வாறு பேச வேண்டும் என்றால் அதனை கட்சி குழுக்கூட்டத்தில் பேச முடியும். மாறாக சபையில் முதலமைச்சரின் தனிப்பட்ட விடயம் தொடர்பில் கேள்விக்கு உட்படுத்த முடியாது என தெரிவித்தார்.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த உறுப்பினர் ரவிகரன், தமிழ் மக்களின் உரிமை தேசியம் பற்றி யார் கதைப்பது என்று தெரியாத நிலை உள்ளது. முதலமைச்சர் பற்றி இப்போது பேசுபவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை. என சாடினார். இங்கு கருத்து தெரிவித்த உறுப்பினர் சிவாஜிலிங்கம், உறுப்பினர் அஸ்மின் முதலமைச்சர் பற்றி கூறிய நிலையில்,

நானா? நீயா?

இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ன? தமிழ் மக்களுடைய தீர்வு தொடர்பில் யார் செல்வது சரி? என்பது தொடர்பில் எங்கு என்றாலும் நாம் விவாதிக்க தயார். ஆகவே அரசியல் பேசுவதற்கு எங்களுக்கும் போதிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். என சிவாஜிலிங்கம் ஆவேசமாக கூறினார். இதன் போது சபையில் மேலும் சலசலப்பு ஏற்பட அவைத்தலைவர் ஓரளவு சமாளிப்புக்குள் கொண்டுவந்தார்.

எனினும் மீண்டும் எழுந்த உறுப்பினர் அஸ்மின், வடக்கு மாகாண முதலமைச்சர் அடுத்த வருட ஆரம்பத்திலாவது தான் இப்போது சென்று கொண்டிருக்கும் பாதையை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். தன்னை சூழ உள்ளவர்கள் அவதானமாக இருக்க வேண்டும். எதிர்வரும் ஆண்டிலாவது அவர் வடக்கு மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்ற முன்வர வேண்டும் எனவும் மீளவும் கூறினார்.

எனினும் முதலமைச்சரினை அஸ்மின் மீளவும் தாக்கி பேசியதால் உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் போது எழுந்த உறுப்பினர் சுகிர்தன், உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி வழங்கும் போது அனைவருக்கும் சமனாக வழங்க வேண்டும் என அவைத்தலைவரை நோக்கி கூறினார். பின்னர் எழுந்த உறுப்பினர் இந்திரராசா, ஆயுதப்போராட்டத்தை கொச்சை படுத்தி பேசிய அஷ்மினுக்கு கண்டனத்தை தெரிவிப்பதாக கூறி, வடக்கு மாகாண சபை ஆயுத போராட்டத்தினால் தான் உருவாகியிருந்தது எனவும் கூறினார்.

அருகதையற்றவர்கள்

இதன் போது கருத்து தெரிவித்த உறுப்பினர் சயந்தன், முதலமைச்சர் ஆயுத போராட்டத்தில் ஈடுபடவில்லை, அதை தான் அஸ்மின் கறைபடியவில்லை என கூறினார். மாறாக ஆயுத போராட்டத்தை கொச்சைப்படுத்தவில்லை என தெளிவுபடுத்தினார். இதன் பின்னர் எழுந்த உறுப்பினர் விந்தன், இப்போது பேசுபவர்கள் எல்லோரும் ஆயுதப்போராட்டம் பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்கள். சில்லறைத்தனமாக இந்த உறுப்பினர்கள் பேசுகின்றார்கள். அது தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை எனவும் கூறினார்.

மீண்டும் கருத்து தெரிவித்த உறுப்பினர் இந்திரராசா, தம்மால் ஒதுக்கப்படும் நிதிக்கு என்ன நடைபெறுகின்றது? என்பது குறித்து எமக்கு தெரியப்படுத்தப்படுவதில்லை. அரச அலுவலர்கள் தாம் நினைத்தபடி, எம்மால் குரிப்பிடடப்படாத வீதிகளையும் செப்பனிடுகின்றனர். என அரச அதிகாரிகளை சாடினார். இதே போன்று குறித்த மோதல் சம்பவத்தில் இருந்து சபை விடுபட்டு, மீண்டும் ஆரோக்கியமான கலந்துரையாடலுக்கு அவை சென்றது.

யார் எதிர்க்கட்சி என்று தெரியவில்லை.

எனினும் மீண்டும் உறுப்பினர் சயந்தன் உரையாற்றும் போது, விவாதம் என்பது குறைகளை சுட்டிக்காட்டத்தான். ஆனால் இங்கே நிறைகளை மட்டுமே கூற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு என்றால், விவாதமே தேவையில்லை. ஒன்றும் இல்லாமல் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றிவிட்டு போய்விடலாம். என சாந்தன் கூறினார்.

இதன் போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் தவராசா, இங்கு யார் எதிர்க்கட்சியினர் என்று தெரியவில்லை. நாங்கள் செய்ய வேண்டியதை ஆளுங்கட்சியினரே செய்து கொள்கின்றனர். என ஒரு குத்தல் போட்டார். எதிர்க்கட்சி தலைவர் ஆளுங்கட்சியின் தயவில் தான் பதவியில் உள்ளார். ஆகையால் தான் அவரது வேலையை நாங்கள் செய்கின்றோம் என சயந்தன் பதிலுக்கு குத்தல் போட்டார்.

குழப்பத்துக்கு இடம் கொடுத்த அவைத்தலைவர்

தொடர்ந்தும் பேசிய சயந்தன், உள்ளூராட்சி அமைச்சின் செயபாடுகள் சிறந்த முறையில் அமையவில்லை எனவும், முதலமைச்சர் வெளி இடங்களில் உரையாற்றும் போது சில உறுப்பினர்கள் சபையை குழப்புவதாகவும் விகாரைகள் கட்டப்படுவதற்கு தமிழ் தலைமைகள் துணை போவதாகவும் உரையாற்றியுள்ளார். இலண்டனில் உரையாற்றும் போதும் முதலமைச்சர் உறுப்பினர்கள் சிலர் சபையை குழப்புகின்றனர் எனவும் கூறினார். இதன் போது குறுக்கிட்ட சர்வேஸ்வரன், சபை மீண்டும் வேறு திசை நோக்கி செல்கின்றது.

முதலமைச்சரினை தனிப்பட்ட ரீதியாக உறுப்பினர் ஒருவர் விமர்சித்து கொண்டு உள்ளார். அதற்கு அவைத்தலைவராகிய நீங்கள் இடம் கொடுத்து கொண்டுள்ளீர்கள். இவ்வாறு பக்கச்சார்பான முறையில் செயற்படுவதனை தவிருங்கள். எனவும் அவைத்தலைவரிடம் சர்வேஸ்வரன் கூறினார். மேலும் ஆயுதப்போராட்டம் தொடர்பில் முதலமைச்சர் ஆரம்பத்தில் ஒரு விமர்சனம் ஒன்றை செய்திருந்தார். அது தொடர்பில் நான் பத்திரிகைகள் மூலம் தான் விளக்கமளித்தேன். எனவே பேச வேண்டியவற்றை, பதில் அளிக்க வேண்டியவற்றை, அந்த இடங்களிலேயே வழங்குங்கள் என சிவாஜிலிங்கம் கூறினார்.

குழப்பம் ஆரம்பம்

வடக்கு மாகாண முதலமைச்சரினை தெரிவு செய்யும் போது தமிழரசு கட்சியும் தான் பங்கு பற்றி இருந்தது. என சிவாஜிலிங்கம் கூற, எவ்வாறு கட்சி பெயரை சபையில் பயன்படுத்தலாம் என உறுப்பினர்களான, அஸ்மின், ஆணல்ட், பரஞ்சோதி, மற்றும் அவைத்தலைவர் சிவஞானம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். எனினும் தான் கட்சியை இழுவுபடுத்தி கூறவில்லை அனைத்து கட்சிகளோடும் தமிழரசு கட்சியும் இருந்தது என்று தான் கூறினேன் என தெளிவு படுத்தினார்.

சபை குழம்பி கொண்டு உள்ளது, உறுப்பினர்கள் கட்டுப்படுகின்றனர் இல்லை என அவைத்தலைவர் கூற, உறுப்பினர்கள் வேறு சம்பவம் தொடர்பில் பேசத்தொடங்கி விட்டார்கள் எனவே சபையை ஒத்திவைக்கலாம் என உறுப்பினர் சிவாஜிலிங்கம் மீண்டும் கூறினார். அது எனக்கு தெரியும் நீ இரு, என கூறிய அவைத்தலைவர், சும்மா கதைத்து பிரயோசனம் இல்லை. வடக்கு மாகாண சபையை கலைக்குமாறு கூறியவர் தான் நீர் என சிவாஜிலிங்கத்தை சாடினார்.

செங்கோலை தூக்க முயன்றதால் பதற்றம்

உங்களுடைய கருத்துக்களை யோசித்து பேசுங்கள், என தனது இருக்கையில் இருந்து சிவாஜிலிங்கம் கூற, மீண்டும் அவைத்தலைவர் முரண்பட சிவாஜிலிங்கம் செங்கோலை நோக்கி வேகமாக சென்றார். இவ்வாறு சிவாஜிலிங்கம் செல்ல தனது இருக்கையில் இருந்து அவைத்தலைவர் எழும்பி வா வா போயா பேயா என ஏட்டிக்கு போட்டிக்கு நின்றார். இதனால் அருகில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து செங்கோல் நோக்கி சென்ற சிவாஜியை சமாதானப்படுத்தினார்கள்.

இந்த சம்பவத்தில் அனைத்து உறுப்பினர்கள் அனைவரும் பதற்றத்தினால் தமது இருக்கைகளில் இருந்து எழுந்தனர். ஒருசிலர் உறுப்பினர்கள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் சபை நடத்தேலாது என உறுப்பினர் பரஞ்சோதி உரத்த குரலில் கூறினார். மேலும் சபையை வெளிநடப்பு செய்ய போவதாகவும் உறுப்பினர்களான பரஞ்சோதி, அஸ்மின், ஆனல்ட், ஆகியோர் கூறி, வெளிநடப்பு செய்ய ஆயத்தமானார்கள். உடனடியாக குழு நிலையிலிருந்த அவையை சபை நிலைக்கு கொண்டுவருவதாக அவைத்தலைவர் அறிவித்தார்.

பின்னணி கண்டறியப்பட வேண்டும்

இதற்கிடையில் கருத்து தெரிவித்த உறுப்பினர் விந்தன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை கோபம் ஏற்படுத்தும் வகையிலும் இயக்கங்களை கீழ்த்தரமாக கூறியும் வேண்டுமென்ற சிலர் குழப்பியுள்ளனர். அவர் செங்கோலை தூக்க முயன்றதற்கு இங்கே இருக்கும் ஒருசிலர் தான் காரணம். போராட்ட இயக்கங்களை கொச்சை படுத்தும் வகையில் இங்கே சில உறுப்பினர்கள் பேசியுள்ளார்கள். அவ்வாறு பேசியதால் தான் சிவாஜிலிங்கம் கோபமடைந்தார். இவற்றை விட பாராளுமன்றத்தில் பாரிய பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. எனினும் உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை அந்தளவு நிலைக்கு தள்ள கூடாது அதனை பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு அவைத்தலைவருக்கு உண்டு.

ஆரம்பம் முதலே வேண்டுமென்றே சபை சிலரால் குழப்பப்பட்டு வந்தது. இந்த பின்னணிகள் தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என விந்தன் கூறினார். இதன் போது உறுப்பினர் ஆனல்ட்க்கும் விந்தனுக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒவ்வொரு உறுப்பினர்களும் தாமாக பேசிக்கொண்டு இருந்தார்கள். இந்த சத்தத்தினால் வெளியில் இருந்தவர்கள் காதை பொத்தியதனையும் காண முடிந்தது. தாம் ஆயுத போராட்டத்தை கொச்சை படுத்தவில்லை எனவும், இங்கே ஆயுதப்போராட்டம் தொடர்பில் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை எனவும் விந்தனுடைய கருத்தை மறுத்து பேசினார் உறுப்பினர் ஆனல்ட்.

ஒரு மணிநேரத்திற்கு திடீர் ஒத்திவைப்பு!

இந்த குழப்ப நிலைகளால் சபையில் ஒருவித பதற்றம் ஏற்பட்டு கொண்டிருக்க சபையை உடனடியாக ஒரு மணித்தியாலத்திற்கு ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார். இதன் போது உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடன் கோபமாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரினார். இந்த ஒத்திவைப்பு நேரத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதன் பின்னர் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் சபை கூடியது. மீண்டும் சபை மதிய உணவின் பின்னர் கூடிய போது சபையில் ஏற்பட்ட குழப்பத்திற்கு உறுப்பினர்களின் வேண்டுதலுக்கு அமைய மன வருத்தத்தை தெரிவிப்பதாக கூறினார்.

அதனை தாம் பெருந்தன்மையுடன் ஏற்பதாக உறுப்பினர் சயந்தன் கூறினார். இவ்வாறான சங்கடங்கள் ஜனாயக அமைப்பில் ஏற்படுவது வழமை தான். நான் மிகவும் மதிப்பு வைத்துள்ள உறுப்பினர்களில் ஒருவர் தான் சிவாஜிலிங்கம் தான். எதோ தவறுதலாக நடைபெற்று விட்டது என அவைத்தலைவர் சிவஞானம் கூறினார். இதன் பின்னர் உரையாற்றிய உறுப்பினர் ரவிகரன், எமது நிலங்கள் பறிபோய் கொண்டிருக்கின்றது. அனால் நாம் சண்டை போட்டு கொண்டுள்ளோம். என ஆவேசத்துடன் கூறினார். இதன் பின்னர் சபை அமைதிக்கு வந்தது.

உறுப்பினர்களுக்கு உறைக்கும் கதை

வானம்பாடி ஒரு பறவை உண்டு, அந்த பறவை பகல் முழுவதும் பறந்து கொண்டே இருக்கும், பின்னர் இரவு நேரத்தில் காலை மேலே வைத்து தலைகீழாக தான் தூங்கும். ஏனென்றால் வானத்தை தான் தான் பகல் முழுவதும் தனது முதுகில் தாங்கியது என்று. இந்த நினைப்பில் தான் இங்கு பல உறுப்பினர்கள் பேசிக்கொண்டு உள்ளார்கள். இங்குள்ள உறுப்பினர்கள் கதைத்ததை எல்லாம் சேர்த்து பார்த்தால் ஒன்றுமே பிரயோசனம் இல்லை என்று தான் தோன்றும்.

இங்குள்ள உறுப்பினர்களில் ஐந்து பேர்களை தவிர ஏனையோர் மாகாண சபை மீது நம்பிக்கையற்ற நிலையில் தான் உள்ளனர். மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் பொறுப்பை உறுப்பினர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மாறாக தேவையற்ற விதத்தில் ஒருவரினை சுரண்டி பார்க்கும் வகையில் ஒருவரின் கருத்து அமைய கூடாது என உறுப்பினர் பசுபதிப்பிள்ளை அறிவுரை கூறினார். இதன் பின்னர் கருத்து தெரிவித்த உறுப்பினர் மயூரன், இங்குள்ள உறுப்பினர்கள் சிலரை குழப்ப வாதிகளாக தான் மக்கள் பார்க்கின்றனர் என ஒரு உண்மையை போட்டுடைத்தார்.

முதலமைச்சரை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்!

வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் எனக்கும் முரண்ட்பாடு உண்டு என்பதனை நான் நேரடியாக கூறுகின்றேன். மற்றவர்கள் போன்று முன்னாள் புகழ்ந்து விட்டு, பின்னால் இகழ்பவன் அல்ல. உறுப்பினர் அஸ்மின் கூறுவது போன்று முதலமைச்சரினை யாரும் செயற்படுத்தவில்லை. அவ்வாறு யாரும் இருந்தாலும் அவர்கள் சொல்வதை கேட்டு செயற்படும் ஆள் முதலமைச்சர் இல்லை. எமது முதலமைச்சர் ஒரு நீதியரசர் அவருக்கு தீர்ப்பு எழுத தெரியும் என புகழ்ந்து பேசினார்.

இதே போன்று மதிய உணவிற்கு முன்னர் சண்டை பிடித்த உறுப்பினர்கள் மதிய உணவின் பின்னர் ஒற்றுமையுடன் பேசி கூடி குழாவி மகிழ்ந்தனர். அவைத்தலைவரும் தனது மனக்கிடைக்களை அவையில் கொட்டி தீர்த்தார். எதிர் வரும் ஆண்டிலாவது நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் செயற்படுவோம் எனவும் அவைத்தலைவர் மீண்டும் மீண்டும் கூறினார். இதனை அடுத்து அவையில் ஏற்பட்ட குழப்பம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

காணொளி  நன்றி -சங்கதி

Related Posts