வடக்கு மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்கிறார் ஆளுநர்

வடக்கு மாகாண சபை தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில், சில புதிய திணைக்களங்களை உருவாக்க முயன்றுள்ளதாகவும், இது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களும், நாட்டின் அரசியலமைப்பையும், தேசிய கொள்கையையும் மதித்து செயற்பட வேண்டும்.

வடக்கு மாகாணசபை தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் புதிய திணைக்களங்களை உருவாக்கும் திட்டங்களை முன்மொழிந்துள்ளது அரசியலமைப்புக்கு எதிரானது.

வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்துக்கு நான் ஒப்புதல் வழங்கியிருந்தேன்.

அத்துடன், அரசியலமைப்புக்கு இணங்கவே மாகாணசபையால் அதிகாரசபைகளை உருவாக்க முடியும் என்ற குறிப்பையும் அவர்களுக்கு அனுப்பியிருந்தேன்.

அவர்கள் வீடமைப்பு திணைக்களம் மற்றும் போக்குவரத்து திணைக்களம் என்பனவற்றை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

அரசியலமைப்பின் படியும், உறுப்பினர்களுக்கான தேசிய கொள்கைப்படியும் செயற்படும்படி அவர்கள் எதிர்பார்க்கப்படுவதாக அவர்களுக்கு கூறிக் கொள்ள வேண்டியுள்ளது.

வடக்கு மாகாணசபை திணைக்களங்களை உருவாக்க முயற்சிக்கும் போது அரசியலமைப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

சில நிர்வாக அலகுகள், கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு சிறிலங்கா அதிபரின், மாகாண ஆளுநரின், மாகாண முதல்வரின் அனுமதி தேவை.

அவர்களால் மட்டுமே, போக்குவரத்து, வீடமைப்பு அதிகார சபைகளை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளேன்.

அவர்களின் வரவு செலவுத்திட்ட விவாதம் முழுவதும் வடக்கு மாகாணசபைக்கு ஒரு சிவிலியன் ஆளுநர் தேவை என்பதை மையப்படுத்தியதாகவே இருந்தது.

ஒரு இராணுவ பின்னணி கொண்ட ஆளுநர் தேவையில்லை என்கின்றனர்.

இராணுவ அல்லது சிவில் ஆளுனர் எவராயினும் அரசியலமைப்பு படியே செயற்பட முடியும்.

அவர்கள் சொல்வதற்கு ஆமாம் என்று தலையாட்டக் கூடிய, மாகாண சபை பற்றிய எந்த அறிவுமில்லாத ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டால் தான் அவர்கள் மகிழ்ச்சி கொள்வார்கள் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts