வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக சிவக்கொழுந்து அகிலதாசை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நியமித்திருப்பது இயற்கைநீதிக்கு முரணான செயல் எனவும், மக்கள் வழங்கியஆணைக்கு மதிப்பளிக்காது செயற்படுவதாகவும் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண சபை உறுப்பினராக இருந்த அங்கஜன் இராமநாதன் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றதையடுத்து அவரது வெற்றிடத்திற்கு சிவக்கொழுந்து அகிலதாசை மாகாண சபை உறுப்பினராக ஐ.ம.சு.கூட்டமைப்பு நியமித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட்டது.
இதில் ஈ.பி.டி.பியைச் சேர்ந்த ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் விருப்பு வாக்கு அடிப்படையில் முன்னிலையில் இருக்கின்றார். இதேவேளை மாகாண சபை உறுப்பிராக நியமனம் பெற்றுள்ள அகிலதாஸ் அவரிலிருந்து 5 வது இடத்தில் இருக்கின்றார். மாகாண சபை உறுப்பினராக நியமனம் பெற்றுக் கொள்ள தகுதியுள்ளவராக ஜயாத்துரை சிறிரங்கேஸ்வரன் உள்ளார் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றும், இவ்வாறு நியமித்திருப்பது நல்லாட்சி செயற்பாடாக இருக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- Monday
- February 24th, 2025