வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியவர்கள் மாகாணசபையில் உள்ளனர் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கு மாகாணசபையின் தீர்மானங்களைக் குப்பைத்தொட்டிக்குள் வீசுமாறு அண்மையில் நீதியரசர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். வெகு விரைவில் அவரே குப்பைத் தொட்டிக்குள் வீசப்படுவார் எனவும் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் வடக்கு மாகாண சபையில் நடைபெற்ற வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் விஜயதாச ராஜபக்ஷ அரசாங்கத்துடன் முரண்பட்டுக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாறினார்.
அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் சிறீலங்கா சுதந்திரகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயதாஸ ராஜபக்சவை தாக்க முற்பட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றினோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு செயற்பட்ட நிலையில் வடக்கு மாகாணசபையின் தீர்மானங்களை குப்பைத் தொட்டிக்குள் வீசுமாறு நீதியமைச்சர் கூறியமை கவலையளிக்கின்றது. இவ்வாறு கூறிய விஜயதாச ராஜபக்ஷ குப்பைத்தொட்டிக்குள் வீசப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.
அத்துடன் அன்று றெஜினோல்ட் குரேக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்த வேளையில் அவரை பத்திரமாக யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவந்து ஆயுதப் பயிற்சி வழங்கியவர்கள் தற்போதும் வடக்கு மாகாண சபையில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.