வடக்கு மாகாணம் என ஒரு மாகாணம் இலங்கையில் அரசியலமைப்பு ரீதியாக இன்னமும் அங்கீகாரம் பெறாத காரணத்தினால், அதற்கு தேர்தல் நடாத்துவதற்கான பணிகளை முன்னெடுக்க முடியாதிருப்பதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
2006ம் ஆண்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர், தேர்தல் நடாத்துவதற்காக கிழக்கு மாகாணம் மாத்திரமே வர்த்தமானி அறிவித்தல் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இதேபோன்று வடக்கு மாகாணமும் ஒரு தனி மாகாணமாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டாலே அதற்கு தேர்தல் நடாத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
“கிழக்கு மாகாணம் வர்த்தமானி பிரகடனத்தின் மூலம் சட்டவாக்கப்படுத்தப்பட்ட பின்னரே அதற்கு தேர்தலை நடாத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார். இதே வழிமுறை வடக்கு மாகாணத்துக்கும் பின்பற்றப்படவேண்டும்” என்றார் தேர்தல் ஆணையாளர்.
வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு குறைந்தது 3 மாதங்கள் தேவை என்று குறிப்பிட்டுள்ள அவர், செப்டெம்பரில் தேர்தல் நடத்தப்படவேண்டுமானால், மே மாதம் ஜனாதிபதி வடக்கு மாகாணம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை விடுக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.