வடக்கு மாகாணத்தில் இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்க திட்டம்

வடக்கு மாகாணத்தில் இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை தற்போது வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் சகல பிரதேச செயலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் முற்றாக அமுல்ப்படுத்தப்பட்ட பின்னர் வடக்கு மாகாணத்தினுள் பதிவிலுள்ள வாகன உரிமையாளர்கள் வடக்கு மாகாணத்தின் எந்த பிரதேச செயலகங்களிலும் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ஆனால் இத்திட்டத்தில் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் பதிவிலுள்ள வாகனங்களுக்குரிய வருமானவரி அனுமதிப்பத்திரங்களை வடக்கு மாகாணத்தில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறான வாகனங்களுக்கு அந்தந்த மாகாணங்களுக்கு சென்று வருமானவரி அனுமதிப்பத்திரத்தினை பொது மக்கள் பெற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.

எனவே எதிர்காலத்தில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் ஏனைய மாகாணங்களின் பதிவிலுள்ள தமது வாகனங்களின் பதிவினை விரைவாக வடக்கு மாகாணத்திற்கு மாற்றி வடக்கு மாகாணத்தில் தங்களுக்குரிய வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதனை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும்” குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts